சிறப்புக் கட்டுரைகள்

சோர்வு போக்கி ஆற்றல் தரும் கூழ்

Published On 2025-03-28 14:59 IST   |   Update On 2025-03-28 14:59:00 IST
  • சிறுதானியம் பெருந்தானியம் எனப் பலவகைத் தானியங்களிலும் கூழ் காய்ச்சுவது வேளாண்குடிகளிடையே உண்டு.
  • ஒவ்வொரு ஆண்டிலும் வெயிலும், வறட்சியும் கூடிக்கொண்டு வரும் இக்காலத்தில் முன்னிலும் முக்கியமான உணவாக இருக்கிறது கூழ்.

கோடை அதன் உச்சத்தை நோக்கி நடைபோடத் தொடங்கி விட்டது. வெயிலின் உக்கிரம் கூடக் கூட குளுமையான வேப்பமரத்திற்கு அடியில் உட்கார்ந்திருந்தாலும் வியர்வை அருவியாக வழிந்தோடும். வியர்வை வழிய வழிய உடலின் நீர்ச்சத்துக் குறையும். அப்போது உடலில் குறைவது நீர்ச்சத்து மட்டுமல்ல ஒட்டமொத்த ஆற்றலும் வடிந்து விடும். சோர்வில் எதையும் செய்யத் தோன்றாது. சோர்வு மிகுந்து விட்டால் உடலினுள் நோய் புகுந்து விடும். நமது புற வெப்பச்சூழலில் இழந்த ஆற்றலை உடனடியாக மீட்டுத் தரவல்லது கூழ்.

 

சோறு, பிரியாணி, களி, இட்லி, தோசை, சப்பாத்தி எதைத் தின்றாலும் அதனை செரிமானமடைவதற்கு உடல் தன்னிடமிருந்து ஒருபகுதி ஆற்றலைக் கொடுத்து தான் உணவில் உள்ள ஆற்றலை எடுக்க முடியும். ஆனால் உடனடியாக செரிமானத்திற்கு எந்த ஆற்றலையும் எடுக்காமல் உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடியது கூழ்.

இந்த வெயிலுக்கு நம்மக்கள் கூழைக் குடித்துதான் பன்னெடுங்காலத்தைக் கடந்து வந்திருக்கின்றனர். நமது உடலானது பெற்றோர், அவர்களது பெற்றோர், அவர்களைப் பெற்றவர்கள் என மரபுக் கூறுகளைச் சுமந்து தான் வந்திருக்கிறது. எனவே அதற்குவொரு நெருக்கடி ஏற்பட்டால் மரபான உணவின் வழியாகவே தன்னை மீட்டுக் கொள்ள முடியும். தை மாசி மாதங்களில் அறுவடை முடிந்து பங்குனியில் நிலத்தை வெயிலில் ஆறப்போடுவார்கள். இந்த சுழற்பருவத்தில் நிலத்தில் வேளாண் வேலையிருக்காது. அன்றாடம் கூலி வேலை செய்து வயிற்றுப் பசியை ஆற்ற மக்களுக்கு வீட்டில் உலை வைக்க ஏதுமிருக்காது. பசிக்கு உள்ளவர் இல்லாதவர் எனப் பாகுபாடு இல்லை. எனவே சகமனிதன் பசித்திருக்கக் கூடாது என்றும் அதேநேரத்தில் பசித்திருக்கும் மனிதனின் கவுரவத்தையும் பாதிக்க கூடாது என்ற நுட்பமான உளவியல் சிந்தனையோடு ஊர்ப்பொதுவில் கூழ்க் காய்ச்சி ஊற்றுவதைச் சடங்காக வைத்திருந்தது வேளாண் சமூகம். தெய்வத்தின் பெயரால் கூழ்க் காய்ச்சுவது என்றால் குதிரில் (சேமிப்பில்) தானியம் வைத்திருப்போர் தாராளமாக வாரி வழங்குவார்கள்.

கூழ் ஊற்றுவதையும் வெறும் சடங்காக வைத்திருந்தால் ஒருநாளில்லை என்பதாலோ ஒருநாள் அதில் சுணக்கம் காட்டி விடுவார்கள் என்றோ என்னவோ அந்தந்த பகுதியில் உள்ள தெய்வங்களுக்கு படையல் செய்து கூழ் ஊற்று வதை வழிபாட்டு முறையாக, தெய்வீகச் சடங்காக வைத்தார்கள். அதனால் தான் தாழியில் கூழ் காய்ச்சி இரண்டு மூன்று நாட்களுக்கு வேண்டுகிற போதெல்லாம் கரைத்துக் கரைத்துக் குடிக்கும் வழக்கம் இன்று ஒழிந்து விட்டது. ஆனாலும், பங்குனி சித்திரையில் அம்மனுக்குக் கூழ்வார்த்தல் கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை இன்றளவும் தவறாது தொடர்கிறது.

பெருந்தெய்வப் படையல் ஆடம்பரமானது. எளிய மக்களின் கைக்குச் சற்றுத் தொலைவிலானது. அதனை அவரவர் வசதி வாய்ப்பிற்கு ஏற்ப சாத்தியப்படும் பொழுது செய்து கொள்வார்கள். ஆனால் இனக்குழுவைக் காப்பாற்றுவதற்காக தம்மையே அர்ப்பணித்த இசக்கி, அம்மன், அய்யனர், வீரன், மாடன் போன்றவர்களை மக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர். இச்சிறுதெய்வங்கள் அனைத்தும் நம் முன்னோர்களே ஆவர். சிறுதெய்வங்களுக்கு வேண்டியதெல்லாம் படைப்பது எளிய மக்களின் கைக்கு சாத்தியமானவை தான். தமக்கு இயன்றவற்றைத் தெய்வத்திற்கு செய்வதன் பேரால் சக மனிதனுக்கும் செய்வதே நம்முடைய பாரம்பரியமான நடைமுறை. அந்தவகையைச் சேர்ந்ததுதான் கூழ் ஊற்றுதலும்.

தமிழகத்தில் காவிரித் தீரம், அதாவது காவிரிப் பாயும் நிலப்பகுதி தவிர மற்றெல்லாப் பகுதிகளிலும் கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, சாமை, வரகு என பத்திற்கும் மேற்பட்ட சிறுதானியங்கள் விளைந்தன. மேட்டுக்காட்டிற்குப் போய் ஆடிமாதம் நிலத்தைக் கீறி பொட்டுநீங்காத தானியத்தைத் தூவி விட்டு வந்தால் போதும். அடுத்தடுத்த இரண்டு மழைகளில் முழங்கால் உயரத்திற்கு வளர்ந்து நிற்கும். ஒருமுறைக்களை எடுத்து விட்டால் போதும். ஐப்பசி அடைமழையில் மணி பற்றி கதிர் பறிந்து குலுங்கும். மார்கழியில் அறுத்து தை மாதத்தில் அடித்து மூட்டை கட்டுவார்கள்.

ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் குறுவிவசாயிகள் வீட்டிலும் பலவிதமான தானியங்களும், பயிறு வகைகளும் குதிர்களிலும், அடுக்குப் பானைகளிலும் சேமிக்கப்பட்டிருக்கும். தலைக்குக் கூரை இல்லை என்றாலும் காலுக்குச் செறுப்பு இல்லை என்றாலும் வயிற்றை நிரப்ப கூழுக்கும், வாயில் கடிக்க வெங்காயம், மிளகாய்க்கு இல்லாமற் போகாது. அதாவது உடலுக்கும் உயிருக்கும் உத்தரவாதமான வாழ்வாதாரம் இருந்து வந்தது. இன்றோ வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி விட்டது போலத் தோன்றினாலும் உயிருக்கு உத்திரவாதமில்லை. நோய்களும் திடீர்ச்சாவுகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகின்றன.

பெருகி வரும் நோய்களுக்கு முதன்மைக் காரணி சட்டென்று ஓரிரு தலைமுறைக்குள்ளேயே மாறிவரும் உணவுப் பழக்க வழக்கம். மேலே சொன்னது போல நம்முடைய உடல் மரபுக்கூறுகளைக் கொண்டே பிறக்கிறது. மரபுக்கூறு காலங்காலமாக பின்பற்றி வந்த உணவில் இருந்தே வடிவமைக்கப்பட்டது. அதனை சடுதியில் மாற்றுகிற பொழுது நம்முடைய உயிரணுக்கள் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைக்கும் திறனைப்பெற அவகாசம் இல்லை. ஆகவே தான் உடல் நெருக்கடிகளைச் சந்திக்கிற பொழுது அவற்றை எதிர்கொள்ள இயலாமல் திணறுகிற பொழுது, உயிரணுக்கள் உடலைக் கை விட்டு விடுகின்றன. கூடு இருக்க குருவி விண்ணேகி விடுகிறது. அதாவது…..

 

 நெல், நெல்லில் இருந்து உமி நீக்கிய அரிசியையும் நாம் காலங்காலமாக உண்டு வந்திருக்கிறோம் தான். ஆனால் தமிழகத்தில் பெரும்பகுதி மக்கள் மூன்று வேளையும் நெல்லரிசியைச் சார்ந்திருக்கவில்லை. மேற்சொன்னது போல பல்வகையான தானியங்களை விளைவித்து வந்திருக்கிறார்கள்.

அவற்றையும் சோறாக வடித்து உண்பதோ, இட்லி – தோசை போன்ற பலகாரங்களாக மாவாக அரைத்துச் சமைப்பதோ இல்லை. அரிதாகவே அவற்றைச் சமைத்து உண்டனர். குறிப்பாக வெயில் காலத்தில் கூழே முதன்மை உணவாக இருந்தது. சிறுதானியம் பெருந்தானியம் எனப் பலவகைத் தானியங்களிலும் கூழ் காய்ச்சுவது வேளாண்குடிகளிடையே உண்டு.

பயிரிடலில் இந்த வருடம் கேழ்வரகு என்றால் அடுத்தவருடம் சோளம். வரகு அல்லது சாமை என்ற மாற்றுப் பயிர் என்பது வேளாண் கலாச்சாரம் ஆகும். பல பகுதிகளில் அனைத்துத் தானியங்களையும் கலவையாகவே பயிரிட்டனர். ஒரு தானியம் மட்டுமே நம்முடைய உடலுக்குத் தேவையான சத்துக்களை ஈடுசெய்து விடுவதில்லை. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான தாதுச் சத்து, கனிமச் சத்து என்று இருக்கும். சுவையும் ஒன்றிற்கொன்று மாறுபடும். இவையெல்லாவற்றையும் விட சில தானியங்கள் மூன்று மாதத்தில் உயிர்ப்பண்பை இழந்து புழுப்பிடிக்கும். சிலதானியங்கள் பல பத்தாண்டுகள் மட்டுமல்ல, பலநூறு வருடங்கள் கூட உயிர்ப்புக் கெடாமல் இருக்கும். இத்தானியங்களின் நிறமும் வேறு வேறு. ஒரே தானியத்தில் வெவ்வேறு நிறங்களில் வகைகள் இருக்கும். சோளத்தை எடுத்துக் கொண்டால் வெள்ளைச் சோளம், சிவப்புச் சோளம், கருப்புச்சோளம் எனப் பலநிறங்களில் உண்டு. அவற்றின் வடிவம் ஒன்றாக இருந்தாலும் நிறமும் சுவையும் வேறுவேறு.

காலையில் சூரியனுக்கு முன் மாடுகளைப் பூட்டிக் கொண்டு, உழவுக் கருவிகளை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு நிலத்திற்குப் போனால் அதனைப் பண்படுத்தும் வேலை, வயதிற்கும், உடல் வலுவிற்கும் ஏற்றாற்போல இருந்து கொண்டே இருக்கும். உள்ள வேலையைக் குடும்பத்தினர் அனைவரும் பகிர்ந்து செய்வார்கள். பொழுது சாய பிற்பகல் மூன்று மணிக்கு வீடு திரும்பியதும் முதல் வேலையாக வீட்டில் உள்ள கம்பு, சோளம் போன்ற தானியத்தை எடுத்து சிறிதளவு நீரில் ஊறப்போடுவார்கள். அதற்கு நேர அளவெல்லாம் இல்லை. அப்படியே வேலைகளுக்கிடையே ஊறும் தானியத்தை எடுத்துக் கடித்துப் பார்ப்பார்கள். பாதியளவிற்குத் தானியம் கடிபட்டதென்றால் அதுதான் பக்குவம். அதனை எடுத்து பனைவோலை அல்லது நார்ப்பெட்டியில் போடுவார்கள். நீர் வடிந்து முக்கால் பதத்தில் இருக்கும்.

அதன் பிறகு அதனைக் கல்லுரலில் போட்டு கருங்காலி அல்லது அதுபோன்ற இறுகலான மரத்திலான பூண் உலக்கையால் இடிப்பார்கள். இடியென்றால் காது தண்டட்டிகள் ஆட இரண்டோ மூன்றோ பெண்கள் கூடி மாறி மாறி லாவகமாக உலக்கையைப் போடுவார்கள். இடிக்கிற நேரத்துல்லியம் இருக்கிறதே மைக்ரான் அளவு கூடப் பிசகாது. அவ்வளவு நுட்பமான பணியது. பேசிக்கொண்டும் பாட்டுப் பாடிக்கொண்டும், பிள்ளைகளை வேலை ஏவிக் கொண்டும் இடிக்கிற வேலை மேகங்கள் கூடி மோதுவதைப் போல தும் தும்துமென்று விழுந்து கொண்டே இருக்கும்.

இடித்த தானியம் மாவாகவும் ஆகாது, ரவைப் பதத்திலும் இருக்காது, கருணையாகவும் இருக்காது. பெருந்தானியம் சிறுதானிய அளவிற்கு உடைபட்ட பின்னர் எடுத்துக் கொதிக்கிற உலையில் சாரளாக உதிர்த்து விடுவார்கள். முறத்தில் இருந்து அள்ளிக் கொட்டினால் கட்டி கட்டியாகப் பிடித்து கிண்டவும் முடியாது, காய்ச்சவும் முடியாது. இடித்த தானிய நொய்யை ஒரு கையால் அள்ளிப்பெய்ய மறுகையால் துடுப்பு கொண்டு கிளறி விட்டுக் கொண்டே இருப்பார்கள். இரண்டு கைகளும் இயந்திர இசைவுடன் வேலையை நளினமாகச் செய்யும்.

அத்தனையும் செய்து முடித்தவுடன் எரியும் தீயைத் தணிப்பார்கள். கொதி டுபுக் டுபுக்கென்று குமிழியிடும். அடுத்த ஓரிரு நிமிடங்களில் எரியும் அடுப்பை அணைத்து விடுவார்கள். என்றாலும் சுள்ளிகளின் தணலில் தாழியில் புழுங்கும் கூழ் டுப் டுப்பென்று வெடித்து ஆவி பறக்கும். அப்பகுதியெங்கும் வாசம் மணக்கும். இயற்கையில் விளைந்த தானியத்தில் காய்ச்சிய கூழில் மேலேடு படியும் பொழுது எண்ணைப் பூசியது போல மினுமினுத்து வெண்ணைக் காகிதம் (பட்டர் பேப்பர்) போல சுருளும்.

 

போப்பு, 96293 45938

கூழைக் காய்ச்சுதலே ஓர் தனித் தொழில்நுட்பம். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இத்தனை நுட்பம் வாய்ந்த கூழைக் காய்ச்சியவன் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பைக் காய்ச்சி வார்த்தான் என்ற வரலாற்றில் ஒன்றும் வியப்பில்லை.

கடந்த இரண்டு இதழ்களில் பார்த்ததைப் போலவே நீராகாரத்திலும், மோரிலும் நிறைந்துள்ள குடலுக்கு நன்மை செய்யும் நுண்ணியிரிகள் கூழிலும் உண்டு.

ஒவ்வொரு ஆண்டிலும் வெயிலும், வறட்சியும் கூடிக்கொண்டு வரும் இக்காலத்தில் முன்னிலும் முக்கியமான உணவாக இருக்கிறது கூழ். வீட்டு உணவாக இருந்த கூழ், இன்று வணிக உணவாக மாறியிருப்பது ஒருவகையில் நல்லதே. ஆனாலும் அதில் உள்ள எதிர்மறையம்சங்கள் குறித்து கவனிக்க வேண்டியுள்ளது. வீட்டிலும் கூழ் எளிதாகக் காய்ச்சும் முறையையும், எந்தெந்த உடல் உபாதைகளின் போது கூழினை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்தும் தொடர்ந்து பார்க்கலாம். தானிய வாரியாக கூழின் சிறப்பம்சங்கள் குறித்தும் காணலாம்.

Tags:    

Similar News