விதியை வெல்ல முடியுமா? ஆன்மிக அறிவியல்: 15
- நண்பர்கள் இருவரும் ஒரே ஊரில் இருந்தாலும் வேறு வேறு பகுதிகளில் இருந்த–தால் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை.
- நண்பனைச் சந்தித்து அவனிடமே விளக்கம் கேட்டான்.
விதியை வெல்லும் நற்செயல்கள் மற்றும் அடாத செயல்கள் என்ன என்பதை பார்த்து வருகிறோம்.
தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை பக்கத்து வீட்டுக்காரனுக்கு இரண்டு கண்களும் போகவேண்டும் என்று வரம் வாங்கிய நண்பன் ஒருவனைப் பற்றி பார்த்தோம்.
மூன்று வரங்கள் பெற்ற நண்பர்களுள் ஒரு நண்பனின் கதை இது.
நண்பர்கள் இருவரும் ஒரே ஊரில் இருந்தாலும் வேறு வேறு பகுதிகளில் இருந்த–தால் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை.
மூன்று வரங்களையும் பயன்படுத்தி முடித்துக் கொண்ட முதலாவது நண்பன், தனது அந்த இரண்டாவது நண்பனைப் பார்க்கச் சென்றான்.
இரண்டாவது நண்பனுடைய வீடும் குடிசை வீடுதான்.
இன்று இவன் பார்க்கப் போகும்போது அந்தக் குடிசை வீடு ஒரு பெரிய மாளிகையாக மாறிவிட்டிருந்தது.
மூன்று வரங்களில் ஒன்றை பயன்படுத்தியிருப்பான் என இவனும் அதனைப் புரிந்து கொண்டான். உடனே இவனுடைய கண்கள் பக்கத்து வீட்டுக்காரனுடைய வீடு எப்படி உள்ளது என்று ஆய்வு செய்தன.
அந்த பக்கத்து வீட்டுக்காரனுடைய வீடும் குடிசை வீடுதான். ஆனால் அதுவும் இப்போது ஒரு மாளிகையாக மாறிவிட்டிருந்தது.
ஆனால் அது நண்பனுடைய வீட்டைப் போல் இரண்டு மடங்காக இல்லாமல், பாதியாகத்தான் இருந்தது.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
நம்முடைய நிலைமை என்னவென்றால், நமக்கு என்ன கிடைக்கிறதோ அதை–விட இரண்டு மடங்காக பக்கத்து வீட்டுக் காரனுக்கு கிடைக்கிறது.
ஆனால் நமது நண்பனுடைய நிலைமை அப்படியே தலைகீழாக அல்லவா மாறியுள்ளது.
நண்பனுக்குக் கிடைத்ததை விட இரண்டு மடங்கு கிடைக்காமல், பாதியாக அல்லவா கிடைத்துள்ளது. இறைவனிடம் பிரார்த்தனை செய்து வரத்தின் தன்மையை மாற்றிக்கொண்டானா?
நண்பனைச் சந்தித்து அவனிடமே விளக்கம் கேட்டான்.
அந்த நண்பனும் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டான்.
"வரத்தைப் பெற்ற நாம் வீட்டுக்குத் திரும்பி வந்த அன்று நமது ஊரில் மழை இருந்ததல்லவா?...
ஸ்ரீ பகவத்
"அப்போது பக்கத்து வீட்டுக்காரன்
என்னிடம் வந்து, தனது வீடு மழையில் ஒழுகுவதாகவும், கூறையை மாற்றுவதற்கு ஐநூறு ரூபாய் வேண்டும் என்றும் கடன் கேட்டு வந்தான்...
"மறுநாள் தருவதாகக் கூறி அவனை அனுப்பி வைத்தேன். அன்று இரவு ஒரு வரத்தை பயன்படுத்தி அவனுடைய வீட்டை ஒரு நல்ல மாளிகையாக மாற்றிவிட்டேன்...
"நமது வரத்தின் தன்மைப்படி, எந்த வரமானாலும் பக்கத்து வீட்டுக்காரனுக்கு இரண்டு மடங்காகக் கிடைத்துவிடும் அல்லவா? வரத்தின்படி அவனுக்கு மாளிகை கிடைத்து விட்டது. அவனுக்கு நான்தானே பக்கத்து வீட்டுக்காரன். அதனால் அந்த மாளிகையை விட இரண்டு மடங்கு பெரிய மாளிகையாக எனக்குக் கிடைத்துவிட்டது!" என்று கூறினான்.
இறைவன் நமக்கு அறிமுகப்படுத்திய பக்கத்து வீட்டுக்காரன் யார்?
அடுத்தவர்களுக்கு நாம் உதவுவோம் என்றால், இரண்டு மடங்காக நன்மைகளைப் பெறும் அந்த பக்கத்து வீட்டுக்காரன் நாமேதான்.
தேவர்கள் அசுரர்கள் என்று நாம் கேள்விப்பட்டுள்ளோம். தேவர்கள் நல்ல இயல்புகளும் நல்லசெயல்களும் உடையவர்கள் என்றும், அசுரர்கள் மோசமான இயல்புகளும் செயல்களும் உடையவர்கள் என்றும் கேள்விப்பட்டுள்ளோம்.
ஒரு முறை அசுரர்கள் இறைவனை குற்றம் சாட்டினார்கள்: "நீங்கள் ஓரவஞ்சனையாக நடந்து கொள்கிறீர்கள். தேவர்களுக்கு தேவையில்லாமல் முன்னுரிமை கொடுக்கி–றீர்கள். அசுரர்களான நாங்கள் எந்த வகையில் குறைந்தவர்கள்?"
அவர்களை அவர்களுக்கு உணரவைப்–பதற்காக இறைவன் ஒரு போட்டியை நடத்தினார்.
அந்தப் போட்டியின்படி தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் தனித்தனியே விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சாப்பாட்டு மேஜையில் உணவு பரிமாறப் பட்டிருந்தது. ஒரேயொரு நிபந்தனையின் பேரில் அனைவருமே உணவைச் சாப்பிடலாம்.
அந்த நிபந்தனையின்படி, கைகளை மட்டும் மடக்கக் கூடாது.
கைகளை மடக்காமல் வைத்துக் கொண்டு உணவைச் சாப்பிட வேண்டும்.
எப்படி சாப்பிடுவது?
கைகளை மடக்காமல் உணவை எப்படி வாயினருகில் கொண்டு செல்வது?
அசுரர்களால் உணவைச் சாப்பிட முடியவில்லை.
சிலர் முன்னோக்கிக் குனிந்து வாயினால் சாப்பிட ஆரம்பித்தார்கள்.
சிலர் உணவை மேல் நோக்கி வீசிப் போட்டு வாயினால் கேட்ச் பிடித்து சாப்பிட்டார்கள்.
இதனால் சரியாக சாப்பிட முடியாமல் உணவு அங்குமிங்கும் சிதறி சேதமானது.
சோதனைக்கு வந்த இறைவனிடம் புகார் தெரிவித்தார்கள்.
"இப்படியா விருந்து வைப்பது? கைகளை மடக்காமல் உணவை எப்படிச் சாப்பிடுவது?"
இறைவன் அசுரர்களை, தேவர்கள் சாப்பிடும் இடத்துக்கு அழைத்துச் சென்றார்.
தேவர்கள் எப்படி உணவைச் சாப்பிட்டார்கள்?
அவர்கள் உணவை ஒருவருக்கு ஒருவர் ஊட்டிக் கொண்டார்கள்.
அடுத்தவர்களுக்கு உணவை ஊட்ட கைகளை மடக்கத் தேவை இல்லை.
உணவுக்கும் எந்த ஒரு சேதாரமும் ஏற்படவில்லை.
அசுரர்களால் தங்களை மட்டுமே எண்ணிப்பார்க்க முடிந்தது.
தேவர்களால் மட்டுமே அடுத்தவர்களை எண்ணிப் பார்த்து அவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க முடிந்தது.
அது தான் தெய்வீகமானது.
ஏழைகளுக்கு உதவி செய்வது உயர்ந்தது. ஆனால் அவர்களுக்கு உதவி செய்யும் அளவில் நமக்குப் பொருளாதார வசதி இல்லை. நாம் எப்படி அவர்களுக்கு உதவுவது?
அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களுள் ஒருவர் பூசலார் நாயனார்.
அந்த நாயனார் வசித்த காலத்தில் அரசர் இறைவனுக்கு ஒரு கோவிலைக் கட்டினார். பல வருடங்களாக நடைபெற்று வந்த நிர்மாண வேலைகள் அனைத்தும் நிறைவடைந்தன.
இனிமேல் கும்பாபிஷேகம் நடத்தி இறைவனை எழுந்தருளச் செய்வது ஒன்று தான் பாக்கி. புரோகிதர்களைக் கூப்பிட்டு, கும்பாபிஷேகத்துக்கான நாள் ஒன்றைக் குறித்தார் மன்னர்.
நாள் குறித்த அன்று இரவே அரசனுடைய கனவில் இறைவன் தோன்றினார். அவர், "உமது நாட்டில் பூசலார் நாயனார் என்னும் ஒருவர் இருக்கிறார். அவரும் என் மீது பக்தி கொண்டு எனக்காக ஒரு கோவிலைக் கட்டிவந்தார். நீங்கள் குறிப்பிட்ட அதே நாளில் கும்பாபிஷேகம் நடத்துவதாக முடிவு செய்துள்ளார். அவருடைய வேண்டு–கோளை ஏற்று அங்கு வருவதாக நானும் ஒப்புக் கொண்டு விட்டேன். ஆகவே கும்பாபி–ஷேகம் நடத்தும் உங்களுடைய தேதியை மாற்றிக் கொள்ளுங்கள்!"
என்று கூறினார்.
அரசரும் இறைவனுடைய விருப்பப்படி, கும்பாபிஷேகத் தேதியை மாற்றிக் கொண்டார் அதனால் முதலில் குறித்த தேதியன்று அவருக்கு கோவில் சம்பந்தமான அலுவல் எதுவும் இல்லை.
ஆகவே பூசலார் நாயனார் நடத்தும் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளலாம் என முடிவு செய்தார்.
பூசலார் நாயனாரின் ஊருக்கு சேவகர்கள் புடைசூழ தேரில் வந்து இறங்கினார் அரசர்.
ஆனால் அந்த ஊரில் புதிதாக கோவில் கட்டப்பட்டதற்கான அறிகுறியோ அல்லது கும்பாபிஷேகம் நடப்பதற்கான அறிகுறியோ எதுவுமே இல்லை.
பூசலார் நாயனார் வீட்டைக் கண்டுபிடித்து அவரை விசாரித்தனர்.
அவரும் "அரசே! நீங்கள் வசதி மிகுந்த மன்னர். நான் வெறும் சாதாரண பிரஜை. கோவிலைக் கட்டும் அளவுக்கு எனக்கு ஏது
வசதி? ஆனாலும் இறைவனுக்கு கோயில் கட்டவேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை. எப்படிக் கட்டுவது? என்னுடைய மனதுக்குள்ளேயே இறைவனுக்கு ஒரு கோவிலைக் கட்டி வந்தேன். அந்தக் கோவிலுக்கு இன்றுதான் கும்பாபிஷேகம்!"
என்று விளக்கம் கொடுத்தார்.
ஆனால் அவருடைய செயலை இறைவனே ஏற்றுக் கொண்டுவிட்டார்.
நற்செயல்களைச் செய்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நற்செயல்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே போதும்.
நற்செயல் புரிந்ததாக இறைவனே அதனை அங்கீகரித்து விட்டார்.
உலகத்து நடைமுறைகளைப் பார்த்திடும் போது சில சந்தர்ப்பங்களில், அதர்மம் செய்திடுவோர் வசதிகள் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்திடுவது போல் தெரியும்.
அது போல் சில சந்தர்ப்பங்களில், தர்ம வழியில் நடந்திடுபவர்கள் சங்கடங்கள் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்திடுவது போலவும் தெரியும்.
கர்ம வினைகளின் ஒழுங்கு முறைகள் சில சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக புரிந்து கொள்ள முடியாது.
இதனால் விதுர நீதி நூலில், இத்தகைய சந்தர்ப்பங்களில் அவசரப்பட்டு முடிவுகள் எதனையும் எடுக்காமல் பொறுமை காத்திட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் ஆன்மிக ஆராய்ச்சியாளர் ஒருவர் தெய்வங்கள் எல்லாம் என்ன பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள் என்று கேட்டதைப் பார்த்தோம்.
ஏன் இப்படி கர்மா, கர்ம வினை, பாவம், புண்ணியம் பிறகு அதற்கான கஷ்டநஷ்டங்கள் என்று இப்படி ஓர் உலகைப் படைக்க வேண்டும்?
படைப்பது தான் படைக்கிறோம், நல்லவித–மான ஓர் உலகத்தைப் படைத்திருக்கலாம் அல்லவா?
உலக சிருஷ்டி பற்றியும் பல்வேறுபட்ட கருத்–துக்கள் மற்றும் சித்தாந்தங்களும் உள்ளன.
அதனையும் பார்ப்போம்.