சிறப்புக் கட்டுரைகள்

தமிழ் வளர்த்த அறிஞர்கள்- தமிழறிஞர் மா.சு.சம்பந்தன்

Published On 2025-03-29 15:00 IST   |   Update On 2025-03-29 15:00:00 IST
  • எண்பதைத் தாண்டிய முதுமையிலும் மா.சு. சம்பந்தன் ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்தார்.
  • சொற்களிடையேயான தேர்தலில் அபேட்சகர் என்ற சொல் தோற்றுப்போய் வேட்பாளர் என்ற சொல் ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டது!

`திரு, திருமதி, வேட்பாளர்` போன்ற வார்த்தைகளைத் தமிழுக்குத் தந்த பெருமைக்குரிய தமிழறிஞர் மா.சு. சம்பந்தன் அவர்கள்.

தமிழக அரசின் மூன்று உயரிய விருதுகளைப் பெற்றவர், பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர், எல்லாப் புத்தகங்களும் அவற்றின் மதிப்புக் கருதி பற்பல அமைப்புகளால் விருது கொடுத்து கெளரவிக்கப்பட்டன.

`தமிழுக்கு மாபெரும் தொண்டாற்றிய மா.சு. சம்பந்தன்` எனத் தாம் வாழ்ந்த சமகாலத்தில் பல உயர்நிலைத் தமிழறிஞர்களால் போற்றப்பட்ட பெருமைக்குரியவர்.

மா.சு. சம்பந்தன் கடின உழைப்பாளி. கடும் உழைப்பால் அவர் உடலே சற்றுக் கறுத்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். உழைப்பை அவர் நிறுத்தி ஓய்வெடுத்துக் கொண்டதே இல்லை.

எண்பதைத் தாண்டிய முதுமையிலும் அவர் ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்தார். அவர் எழுதிய ஒவ்வொரு நூலும் கடின உழைப்புத் தேவைப்படுகிற நூல்கள்.

பல்கலைக் கழகங்கள் ஒரு குழு வைத்துச் செய்ய வேண்டிய பணிகள் பலவற்றை அவர் தனியொருவராகச் செய்து கொண்டிருந்தார் என்று சொன்னால் அது மிகையல்ல.

ஸ்ரீமான் எம்.எஸ். சம்பந்தன் என்று எழுதிக் கொண்டிருந்த பெயரை திரு மா.சு. சம்பந்தன் என்று இன்று நாம் எழுதக் காரணம் மா.சு. சம்பந்தனேதான். (மாரம்பேடு சுப்பிரமணியன் மகன் சம்பந்தன் என்பதன் சுருக்கமே மா.சு. சம்பந்தன் என்பது.)

பெயர்களுக்கு முன் ஸ்ரீமான் ஸ்ரீமதி என்று எழுதுவதை எதிர்த்தார் அவர். தூய தமிழில் `திரு` என்றும் `திருமதி` என்றும் எழுத வேண்டும் என்ற தீர்மானத்தை சென்னை மாநகராட்சி அவையில் நிறைவேற்றினார்.

அதன்பிறகு ஸ்ரீமான்களும் ஸ்ரீமதிகளும் தமிழிலிருந்து அவசர அவசரமாக விடைபெற்றார்கள். திருவாளர்களும் திருமதிகளும் மகிழ்ச்சியோடு உலவத் தொடங்கினார்கள். இந்த முக்கியமான `திரு`த்தத்திற்குக் காரணம் மா.சு. சம்பந்தன்.

அபேட்சகர் என்ற சொல்லையும் ஒழித்தார். வேட்பாளர் என்ற அழகிய தமிழ்ச் சொல்லைத் தாம் தேர்தலில் போட்டியிட்டபோது பயன்படுத்தினார். அந்தச் சொல்லை இயல்பான வழக்குச் சொல்லாக உருவாக்கி விட்டார்.

சொற்களிடையேயான தேர்தலில் அபேட்சகர் என்ற சொல் தோற்றுப்போய் வேட்பாளர் என்ற சொல் ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டது! இன்று அபேட்சகர் என்று யாரும் எழுதுவதே இல்லை. வேட்பாளர் என்றுதான் எல்லாக் கட்சியினரும் குறிப்பிடுகிறார்கள்.

எழுத்திலும் பத்திரிகைத் தொழிலிலும் இளமை முதலே ஆர்வம் கொண்டிருந்தார். தொடக்கத்தில் `தமிழர் மலர்` என்னும் கையெழுத்து இதழை நடத்தினார். பின்னர் தமிழ் வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றிய `முருகு, மதி` ஆகிய மாத இதழ்களுக்கு ஆசிரியராக இருந்து அவற்றை நடத்தினார். `எங்கள் நாடு` நாளேட்டில் சில ஆண்டுகள் துணையாசிரியராகப் பணியாற்றினார்.

அறிஞர் வ.ரா.வின் `பாரத தேவி` இதழிலும் இவர் எழுத்துகள் இடம்பெற்றன. இவரது `பண்டை நாகரிகமே வேண்டும்!` என்ற முதல் கட்டுரையே வ.ரா.வின் பாரத தேவி இதழில் தான் இடம்பெற்றது.

 

சி.பா. ஆதித்தனார்

சி.பா. ஆதித்தனார் நடத்திய தமிழன் இதழில் ஜி.டி.நாயுடு பற்றி இவர் எழுதிய கட்டுரை பலரின் கவனத்தை ஈர்த்தது.

`தமிழ் உலகம், போர்வாள்` போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதியவர். `தமிழர் கழகம்` என்ற மொழி நலன் சார்ந்த அமைப்பின் தலைவர்.

`தமிழர் பதிப்பகம்` என்ற வெளியீட்டகத்தை 1947முதல் நடத்தி வந்தவர்.

கா. அப்பாதுரை எழுதிய `வருங்காலத் தமிழகம்`, மு. வரதராசன் எழுதிய `கி.பி. 2000`, கி.ஆ.பெ. விஸ்வநாதன் எழுதிய `வானொலியிலே`, கவிஞர் தமிழ்ஒளி எழுதிய `வீராயி` போன்ற பல முக்கியமான நூல்களைத் தமது தமிழர் பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார்.

இவரே எழுதிய `சென்னை மாநகர், அச்சுக்கலை, அச்சும் பதிப்பும், சிறந்த பேச்சாளர்கள், தமிழ் இதழியல் வரலாறு, திரு.வி.க., இங்கர்சால், எழுத்தும் அச்சும், தொடர்பன் கட்டுரைகள்` போன்ற நூல்கள் அந்தந்தத் துறையில் முன்னோடி நூல்கள்.

இவர் தமிழ்நடை மட்டுமல்ல, தமிழுக்காக இவர் நடந்த நடையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ், பாட மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் நீதி மொழியாகவும் வளர வேண்டும் என விரும்பினார்.

தமிழுணர்ச்சி இல்லாத கால்நடையாகப் பெரும்பாலோர் இருப்பதை எண்ணி மனம் வருந்தினார். அவர்களுக்கு உண்மை நிலையை அறிவுறுத்த வேண்டி `எங்கும் தமிழ், எதிலும் தமிழ்` என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை கால்நடையாகப் பயணம் மேற்கொண்டார்.

இந்தத் தென்னாட்டு வினோபா நடந்தது மட்டுமல்ல, இவர் நினைத்ததும் நடந்தது. அவரது நடைப்பயணத்திற்குப் பின் தமிழ் மொழி அரியணை ஏறிற்று.

சென்னை கன்னிமாரா நூலகத்தில் சிறிது காலம் இளநிலை அலுவலராகப் பணிபுரிந்தார். தமிழர் பேரவை, ஒய்எம்சிஏ பட்டிமன்றம் ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், துணைத் தலைவராகவும் பொறுப்புகளை வகித்துள்ளார்.

அவரின் பெருமையை உணர்ந்து அறிஞர் அண்ணாதுரை கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மாநகராட்சித் தேர்தலில் நின்று மாநகராட்சி உறுப்பினராக ஆனார்.

கச்சாலீஸ்வரர் வட்டத்திலிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1959 முதல் 64 வரை சென்னை மாநகராட்சியில் அங்கம் வகித்த பெருமையும் இவருக்கு உண்டு. இம் மாநகராட்சியிலிருந்து சென்னைப் பல்கலைக் கழகப் பேரவை (செனட்) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அண்ணாதுரையால் பாராட்டப்பட்ட இவரது `அச்சுக்கலை` நூல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் முதல் பரிசு பெற்றது. தமிழக அரசின் அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் பரிசு வழங்கினார். தமிழில் வெளிவந்துள்ள அச்சுக்கலை தொடர்பான நூல்களில் மிக முக்கியமான முன்னோடி நூல் அது.

இவர் எழுதிய `அச்சும் பதிப்பும்` என்ற நூல் தமிழ் வளர்ச்சி இயக்கத்தின் முதல் பரிசைப் பெற்றது. அந்தப் பரிசை அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் வழங்கினார்.

`பதிப்புக் கலைச் செல்வர்` என்ற உயரிய விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. `எழுத்தும் அச்சும், தமிழ் இதழியல் வரலாறு, தமிழ் இதழியல் களஞ்சியம், தமிழ் இதழியல் சுவடுகள், சிறந்த பேச்சாளர்கள், சென்னை மாநகர்` உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட முக்கியமான நூல்களின் ஆசிரியர்.

 

திருப்பூர் கிருஷ்ணன்

மா.சு. சம்பந்தன் எழுதிய ஒவ்வொரு நூலும் தமிழ் மொழி வரலாற்றில் முத்திரை பதித்துச் சாதனை படைத்த நூல் என்பதுதான் அவரது பெருமை..

வேதாசலம் என்ற பெயர் மறைமலை அடிகள் எனவும் சூரியநாராயண சாஸ்திரியார் என்ற பெயர் பரிதிமாற் கலைஞர் எனவும் மாற்றம் பெற்றதுபோல், தொடக்க காலத்தில் சம்பந்தன் என்ற தம் பெயரை தனித் தமிழில் `தொடர்பன்` என மாற்றிக் கொண்டார். அந்தப் பெயரிலேயே சிறிதுகாலம் கட்டுரைகள் எழுதினார்.

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விஸ்வநாதன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை `திருச்சி விசுவநாதம்` என்ற தலைப்பில் நூலாக எழுதினார். அதில் நூலை எழுதியவர் பெயராக மா.சு. சம்பந்தன் என்ற பெயரும் அதன் கீழே அடைப்புக் குறிக்குள் `தொடர்பன்` என்ற பெயரும் அச்சிடப்பட்டிருந்தன.

பெரியார், சோமசுந்தர பாரதியார், பிரசண்ட விகடன் இதழாசிரியர் நாரண துரைக்கண்ணன், பெருந்தலைவர் காமராஜ், ரா.பி. சேதுப்பிள்ளை, எம்.வி. வேணுகோபாலப் பிள்ளை போன்ற தமிழகம் நன்கறிந்த உயர்நிலைப் பிரமுகர்களால் பாராட்டப்பட்டவர்.

அ.ச. ஞானசம்பந்தன்., துரை அரங்கனார், மா. இராசமாணிக்கனார் போன்ற தமிழ் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர் என்பது மட்டுமல்ல, அவர்களது மாணவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

தலைநகரத் தமிழ்ச் சங்கம் நடத்திய பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைப்பட்டவர். தமிழுக்காகச் சிறை செல்வதைப் பெருமையாகக் கருதினார். தமது அழகிய தமிழ் நடையால் இலக்கிய ஆர்வலர்களின் அன்பு மனங்களில் சிறைப்பட்டவரும் கூட.

2011இல் அவர் திடீரென்று காணாமல் போனார். காணாமல் போவதற்கு 2 மாதங்கள் முன்பு வெளியே போனபோது மயக்கம் போட்டுக் கீழே விழுந்து விட்டார். அங்கிருந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டுத் தகவல் சொன்னார்கள். பிறகு உடல்நலம் பெற்று வீடு வந்த அவர் நல்ல ஆரோக்கியத்தோடுதான் இருந்தார்.

கவிஞர் சுரதாவைப் போல், முதுமைக் காலத்திலும் எப்போதும் இலக்கியக் கூட்டங்களுக்குப் பேருந்தில்தான் செல்வார். இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்வது அவருக்கு மிகவும் விருப்பமான செயலாக இருந்தது.

உடல்நலம் தேறியபின் பழையபடி பேருந்தில் இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்லத் தொடங்கிவிட்டார்.

அவர் காணாமல் போனபோது அவர் வயது 89. தனித்தே பல இடங்களுக்குப் போய்வரும் அளவு ஆரோக்கியத்துடனேயே இருந்தவர், எங்கே எப்படிக் காணாமல் போனார் என்ற தகவல் எதுவும் தெரியவில்லை.

பதிமூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. அவரைப் பற்றிய செய்தி எதுவும் கிட்டவில்லை.

அவர் காணாமல் போனாலும் தமிழில் அவர் கொண்டுவந்த சீர்திருத்தங்கள் உறுதியாய் நிலைபெற்று விட்டன. இன்று பல தூய தமிழ்ச் சொற்கள் நம்மிடையே புழங்குவதற்கு முக்கியக் காரணம் மாபெரும் தமிழறிஞர் மா.சு. சம்பந்தன்தான் என்பதுதான் தமிழ்சார்ந்த அவரது பல பெருமைகளில் மிக முக்கியமானது.

அவரது நூல்களின் பெருமையை உணர்ந்து தமிழ்நாடு அரசு அவர் நூல்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. தனி மனிதர்கள் ஓயாத கடும் உழைப்பால் மொழியை எப்படி வளப்படுத்த முடியும் என்பதற்கு மாபெரும் தமிழறிஞரான மா.சு. சம்பந்தன் ஒரு நிரந்தர எடுத்துக்காட்டு.

தொடர்புக்கு,

thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News