ஒரே நாளில் 287 சர்வதேச போட்டியில் விளையாடிய மிட்செல் ஸ்டார்க்- அலீசா ஹீலி தம்பதி
- அலீசா ஹீலிக்கும், மிட்செல் ஸ்டார்க்கும் இது 287-வது சர்வதேசப் போட்டியாக அமைந்தது.
- மிட்செல் ஸ்டார்க் -அலீசா ஹீலி இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் அவரது மனைவி அலீசா ஹீலி இருவரும் வித்தியாசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளனர்.
ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி கிரிக்கெட் அணி காலேயில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 654/6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 2-வது நாள் முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்துள்ளது. மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட் வீழ்த்திய போது சர்வதேச கிரிக்கெட் 700-வது விக்கெட்டாக அமைந்தது.
அதே வேளையில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி மெல்பர்னில் இன்று தொடங்கியது. இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய நாட் ஷிவர் பிரண்ட் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டனான அலீசா ஹீலிக்கும், மிட்செல் ஸ்டார்க்கும் இது 287-வது சர்வதேசப் போட்டியாக அமைந்தது. நட்சத்திர கிரிக்கெட் தம்பதிகள் இருவரும் ஒரே நாளில் 287-வது போட்டியில் விளையாடியதற்கு ரசிகர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மிட்செல் ஸ்டார்க் -அலீசா ஹீலி இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அலீசா ஹீலி 10 டெஸ்ட், 115 ஒருநாள், 162 டி20 போட்டிகளிலும், மிட்செல் ஸ்டார்க் 95 டெஸ்ட், 127 ஒருநாள், 65 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.