கிரிக்கெட் (Cricket)

ஆர்ச்சர் பந்துவீச்சை அடித்து விளாசியது ஏன்?: திலக் வர்மா

Published On 2025-01-27 05:28 IST   |   Update On 2025-01-27 05:28:00 IST
  • 2வது டி20 போட்டியில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
  • இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவரில் 60 ரன்களை வாரி வழங்கினார்.

சென்னை:

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2-வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் 3-வது வரிசையில் இறங்கிய திலக் வர்மா நிலைத்து நின்று இந்திய அணியை கரைசேர்த்தார். திலக் வர்மா 72 ரன்கள் அடித்து தனி ஆளாகப் போராடி வெற்றி பெற்றுக் கொடுத்தார்.

இந்தப் போட்டியில் திலக் வர்மா இங்கிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சரின் பந்துவீச்சில் மட்டும் 4 சிக்சரை பறக்க விட்டார். இதில் 4 ஓவர் வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் 60 ரன்களை வாரி வழங்கி, டி20 கிரிக்கெட்டில் மோசமான பந்துவீச்சையும் பதிவு செய்தார்.

இந்நிலையில், இங்கிலாந்து பவுலர் ஆர்ச்சர் ஓவரை அடித்து நொறுக்கியது ஏன் என திலக் வர்மா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, திலக் வர்மா கூறுகையில், அவர்களின் சிறந்த பவுலரை நான் டார்கெட் செய்ய விரும்பினேன். அவர்களுடைய சிறந்த பவுலரை அட்டாக் செய்தால் மற்ற பவுலர்கள் அழுத்தத்திற்குள் தள்ளப்படுவார்கள். எனவே மறுபுறம் விக்கெட் விழும்போது நான் எதிரணியின் சிறந்த பவுலரை எதிர்கொள்ள விரும்பினேன்.

அதனால் ஆர்ச்சருக்கு எதிராக அதிரடியாக விளையாட முயற்சித்தேன். அவருக்கு எதிராக நான் வெளிப்படுத்திய ஷாட்டுகள் வலைப் பயிற்சியில் வேலை செய்ததாகும். அதற்கு நான் மனதளவில் தயாராக இருந்தேன். அவ்வாறு செய்தது எனக்கு நல்ல முடிவை கொடுத்தது. எது நடந்தாலும் களத்தில் கடைசி வரை நின்று போட்டியை முடிக்கவேண்டும் என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News