ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் போட்டி: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி
- பந்து வீச்சில் ஆவேஷ் கான், கலீல் அகமது, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் மிரட்டுகிறார்கள்.
- உள்ளூர் அனுகூலத்தை பயன்படுத்தி தொடரை இழக்காமல் இருக்க எல்லா வகையிலும் ஜிம்பாப்வே அணி போராடும்.
ஹராரே:
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த 2 ஆட்டங்களில் இந்திய அணி முறையே 100 ரன், 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டு தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
இந்திய அணியில் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் என்று பெரிய பட்டாளமே வரிசை கட்டி நிற்கிறது. பந்து வீச்சில் ஆவேஷ் கான், கலீல் அகமது, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் மிரட்டு கிறார்கள்.
எதிர்பாராதவிதமாக முதலாவது ஆட்டத்தில் சிறிய இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவிய இந்திய அணி அடுத்த 2 ஆட்டங்களில் அதிக ரன் குவித்து வெற்றிக்கனியை பறித்தது. அதே போல் இன்றைய ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தி தொடரை வசப்படுத்தும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர். அதே சமயம் கடந்த 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த ஜிம்பாப்வே அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும். எனவே அந்த அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.
ஜிம்பாப்வே அணியில் கேப்டன் சிகந்தர் ராசா, வெஸ்லி மாதவெரே, பிரையன் பென்னெட், டியான் மயர்ஸ், கிளைவ் மடான்டே, முஜரபானி உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். உள்ளூர் அனுகூலத்தை பயன்படுத்தி தொடரை இழக்காமல் இருக்க எல்லா வகையிலும் ஜிம்பாப்வே அணி போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது.
ஜிம்பாப்வே: வெஸ்லி மாதவெரே, டாடிவான்சே மருமானி, பிரையன் பென்னெட், டியான் மயர்ஸ், சிகந்தர் ராசா (கேப்டன் ), ஜோனதன் கேம்ப்பெல், கிளைவ் மடான்டே, வெலிங்டன் மசகட்சா, பிளஸ்சிங் முஜரபானி, ரிச்சர்ட் என்கராவா, சதரா.
மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 2, 3, 4 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.