விளையாட்டு

சரிவில் இருந்து மீளுமா குஜராத்?- பெங்களூரு அணியுடன் இன்று மோதல்

Published On 2024-05-04 09:14 IST   |   Update On 2024-05-04 09:14:00 IST
  • பெங்களூரு அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 7 தோல்வி என 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் ஊசலாடுகிறது.
  • முன்னாள் சாம்பியனான குஜராத் அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

பெங்களூரு:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் அரங்கேறும் 52-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.

பெங்களூரு அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 7 தோல்வி என 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் ஊசலாடுகிறது. அடுத்த சுற்று வாய்ப்பில் நூலிழையில் தொங்கி கொண்டிருக்கும் பெங்களூரு அணி தனது எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெறுவதுடன், மற்ற அணிகளின் முடிவும் சாதகமாக அமைந்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைப்பதை நினைத்து பார்க்க முடியும். மாறாக ஒன்றில் தோற்றாலும் வெளியேற வேண்டியது தான்.

பெங்களூரு அணி தனது முந்தைய 2 ஆட்டங்களில் 35 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்தையும், 9 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தையும் பந்தாடிய உத்வேகத்துடன் இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது. பேட்டிங்கில் விராட் கோலி (ஒருசதம், 4 அரைசதம் உள்பட 500 ரன்), கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், தினேஷ் கார்த்திக் நல்ல நிலையில் உள்ளனர். கடந்த சில ஆட்டங்களில் ரஜத் படிதார், வில் ஜாக்ஸ், கேமரூன் கிரீன் ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளிக்க தொடங்கி இருக்கின்றனர். பந்து வீச்சில் யாஷ் தயாள், முகமது சிராஜ், கரண் ஷர்மா வலுசேர்க்கிறார்கள். லோக்கி பெர்குசன், ஸ்வப்னில் சிங் ரன்களை வாரி வழங்குவதில் சிக்கனம் காட்ட வேண்டியது அவசியமானதாகும்.

முன்னாள் சாம்பியனான குஜராத் அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி 10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. எஞ்சிய 4 ஆட்டங்களும் அந்த அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கலாம்.

குஜராத் அணி தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் டெல்லி, பெங்களூருவிடம் அடுத்தடுத்து உதை வாங்கியது. இதனால் அந்த அணி சரிவில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்புடன் தயாராகி இருக்கிறது. குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன் (418 ரன்), சுப்மன் கில் (320) அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள். டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, விருத்திமான் சஹா ஆகியோரும் அசத்தினால் பேட்டிங் மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் மொகித் ஷர்மா, ரஷித் கான், சாய் கிஷோர், நூர் அகமது நம்பிக்கை அளிக்கிறார்கள்.

அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பில் நிலைக்க பெங்களூரு அணி தீவிரம் காட்டும். குஜராத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் எளிதாக வெற்றியை ருசித்ததும், உள்ளூர் சூழலும் அந்த அணிக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்கும். அதேநேரத்தில் பெங்களூருவிடம் முந்தைய ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன், அடுத்த சுற்று வாய்ப்பையும் தக்க வைத்து கொள்ள குஜராத் அணி தனது முழு திறனையும் வெளிப்படுத்த முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. அத்துடன் இந்த மைதானத்தில் பவுண்டரி தூரம் குறைவு என்பதால் ரன் மழையையும் எதிர்பார்க்கலாம். இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 2-ல் வெற்றி கண்டுள்ளன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், கரண் ஷர்மா, முகமது சிராஜ், யாஷ் தயாள், ஸ்வப்னில் சிங்

குஜராத்: விருத்திமான் சஹா, சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், டேவிட் மில்லர், ஷாருக் கான், ராகுல் திவேதியா, ரஷித் கான், சாய் கிஷோர், மொகித் ஷர்மா, நூர் அகமது.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

Tags:    

Similar News