விளையாட்டு

புத்தாண்டை தனது மனைவி, குழந்தைகளுடன் கொண்டாடிய மெஸ்சி

Published On 2023-01-02 10:22 IST   |   Update On 2023-01-02 10:22:00 IST
  • புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் உடல் ஆரோக்கியமும், சந்தோசமும் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  • உலகக் கோப்பை வெற்றிக்களிப்பில் மூழ்கியுள்ள அவர் புத்தாண்டை தனது மனைவி, குழந்தைகளுடன் உற்சாகமாக கொண்டாடினார்.

பியூனஸ் அயர்ஸ்:

லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி சமீபத்தில் கத்தாரில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்சை சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. 36 ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பையை வென்று தாயகம் திரும்பிய அர்ஜென்டினா வீரர்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.

இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 7 கோல்கள் அடித்து சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட 35 வயதான லயோனல் மெஸ்சி, இன்னும் தனது கிளப் அணியான பாரீஸ் செயின்ட் ஜெர்மைனுடன் இணையவில்லை.

உலகக் கோப்பை வெற்றிக்களிப்பில் மூழ்கியுள்ள அவர் புத்தாண்டை தனது மனைவி, குழந்தைகளுடன் உற்சாகமாக கொண்டாடினார். அது தொடர்பான புகைப்படங்களை ரசிகர்களுக்காக சமூக வலைதளத்தில் பகிர்ந்து அவர் வெளியிட்ட ஒரு பதிவில், '2022-ஆண்டு முடிந்து விட்டது.

இந்த ஆண்டை எனது வாழ்வில் ஒரு போதும் மறக்க முடியாது. உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவை எப்போதும் துரத்திக்கொண்டு இருந்தேன். இறுதியில் அது 2022-ல் நனவாகி உள்ளது. மிகவும் சிறப்பு வாய்ந்த இத்தகைய மறக்க முடியாத நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

எனது தேசம் மற்றும் பாரீஸ், பார்சிலோனா இன்னும் பல நகரங்கள், நாடுகளில் இருந்து எனக்கு கிடைத்த அன்பும், பேராதரவும், ஊக்கத்தினால் தான் இது சாத்தியமாகி இருக்கிறது. புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் உடல் ஆரோக்கியமும், சந்தோசமும் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துகள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News