தேசிய இளையோர் தடகளம்: 5 ஆயிரம் மீட்டர் நடைபந்தயத்தில் நிதின் குப்தா புதிய சாதனை
- தேசிய இளையோர் தடகள சாம்பயின்ஷிப் போட்டி பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று தொடங்கியது.
- பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தின் எட்வினா ஜேசன் 55.86 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
பாட்னா:
தேசிய இளையோர் தடகள சாம்பயின்ஷிப் போட்டி பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் 5 ஆயிரம் மீட்டர் நடைபந்தயத்தில் உத்தரபிரதேச வீரர் நிதின் குப்தா 19 நிமிடம் 24.48 வினாடிகளில் இலக்கை கடந்து தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
கடந்த ஆண்டு புவனேஷ்வரில் நடந்த தடகள போட்டியில் 20 நிமிடம் 01.64 வினாடிகளில் இலக்கை எட்டியிருந்த அவர் தனது சொந்த சாதனையை தகர்த்து இருக்கிறார்.
பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தின் எட்வினா ஜேசன் 55.86 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அரியானா வீராங்கனைகள் தன்னு (56.06 வினாடி) வெள்ளிப்பதக்கத்தையும், தீபிகா (56.47 வினாடி) வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.
பெண்களுக்கான 100 மீட்டர் ஒட்டபந்தயத்தில் அரியானாவின் ஆர்த்தி 12.23 வினாடிகளில் வந்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். அவருக்கு அடுத்தபடியாக பிரிஷா முஷ்ரா (அரியானா) 12.24 வினாடிகளில் கடந்து 2-வது இடத்தை பிடித்தார். ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் கர்நாடக வீரர் சிராந்த் (10.89 வினாடி) தங்கப்பதக்கமும், தமிழகத்தின் பிரெட்ரிக் ரஸ்செல் (11.04 வினாடி) வெள்ளிப்பதக்கமும், பீகாரின் திவ்யான்ஷ் குமார் ராஜ் (11.08 வினாடி) வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர்.