
ஐதராபாத் அணியை சமாளிக்குமா லக்னோ? இன்று மோதல்
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தனது முதல் லீக்கில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சிடம் தோற்றது.
- இந்த மைதானத்தில் கடந்த சீசனில் 7 முறை 200 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டன.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை சந்திக்கிறது.
ஐதராபாத் தனது தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 44 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதில் இஷான் கிஷன் சதத்தோடு 286 ரன்கள் குவித்து மலைக்க வைத்த ஐதராபாத் அணி, எதிரணியை 242 ரன்னில் மடக்கியது.
அந்த அணியில் அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ்குமார் ரெட்டி என அபாயகரமான பேட்ஸ்மேன்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். இவர்களில் ஒருவர் நிலைத்து நின்றாலே எதிரணி நிலைமை திண்டாட்டம் தான். சொந்த ஊரில் நடப்பது அவர்களுக்கு கூடுதல் அனுகூலமாகும்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தனது முதல் லீக்கில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சிடம் தோற்றது. இதில் மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன் ஆகியோரது அரைசதத்தால் 209 ரன்கள் சேர்த்த லக்னோ அணி, வெற்றியை நெருங்கி வந்து கடைசி நேரத்தில் கோட்டை விட்டது. ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட கேப்டன் ரிஷப் பண்ட் டக்-அவுட் ஆகிப்போனார். தவறுகளை திருத்திக் கொண்டு முதல் வெற்றிக்காக போராடுவார்கள்.
இவ்விரு அணிகள் இதுவரை 4 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 3-ல் லக்னோவும், ஒன்றில் ஐதராபாத்தும் வெற்றி பெற்றுள்ளன. இந்த மைதானத்தில் கடந்த சீசனில் 7 முறை 200 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டன. இதனால் இந்த தடவையும் ரன்விருந்தை எதிர்பார்க்கலாம். போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ஐதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகெட் வர்மா, அபினவ் மனோகர், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), சிமர்ஜீத் சிங், ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி, ஆடம் ஜம்பா.
லக்னோ: எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), டேவிட் மில்லர், ஆயுஷ் பதோனி, ஷர்துல் தாக்குர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், திக்வேஷ் ரதி, ஆவேஷ்கான், எம்.சித்தார்த்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.