புரோ கபடி லீக் 'பிளே ஆப்' சுற்றுக்கு நுழையும் 5 அணிகள் எவை?
- புரோ கபடி ‘லீக்’ போட்டிகள் நேற்றுடன் 106 ஆட்டங்கள் முடிவடைந்து உள்ளன.
- இன்னும் 26 ‘லீக்’ ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.
புனே:
11-வது புரோ கபடி லீக் போட்டியின் 3-வது கட்ட ஆட்டங்கள் புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் 37-26 என்ற புள்ளி கணக்கில் பெங்களூருவை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் அரியானா முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி 19 ஆட்டத்தில் 15 வெற்றி, 4 தோல்வியுடன் 77 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் மும்பை அணி 47-31 என்ற கணக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தி 10-வது வெற்றியை பெற்றது. தமிழ் தலைவாஸ் 10-வது தோல்வியை தழுவியது.
புரோ கபடி 'லீக்' போட்டிகள் நேற்றுடன் 106 ஆட்டங்கள் முடிவடைந்து உள்ளன. இன்னும் 26 'லீக்' ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.
பிளே ஆப் சுற்றுக்கு நுழைய உள்ள எஞ்சிய 5 அணிகள் எவை என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. மும்பை அணி 10 வெற்றி, 6 தோல்வி, 2 டையுடன் 60 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திலும், பாட்னா பைரேட்ஸ் 10 வெற்றி, 6 தோல்வி, 1 டையுடன் 58 புள்ளிகள் பெற்று 3-வது இடத்திலும் உள்ளன.
உ.பி. யோத்தாஸ் 9 வெற்றி, 6 தோல்வி, 2 டையுடனும், டெல்லி அணி 8 வெற்றி, 5 தோல்வி, 4 டையுடனும் தலா 56 புள்ளிகள் பெற்று முறையே 4-வது, 5-வது இடத்தில் உள்ளன.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (9 வெற்றி, 7 தோல்வி, 2 டை), தெலுங்கு டைட்டன்ஸ் (10 வெற்றி, 8 தோல்வி) தலா 54 புள்ளிகளுடன் 6-வது மற்றும் 7-வது இடத்தில் உள்ளன.
நடப்பு சாம்பியன் புனே (49 புள்ளி), 8-வது இடத்திலும், தமிழ் தலைவாஸ் (38 புள்ளி), 9-வது இடத்திலும் உள்ளன. பெங்கால் வாரியர்ஸ் (37), குஜராத் (34), பெங்களூரு (19) ஆகிய அணிகள் முறையே 10 முதல் 12-வது இடத்தில் உள்ளன.
வருகிற 24-ந்தேதி 'லீக்' ஆட்டங்கள் முடிகிறது. 26-ந்தேதி பிளே ஆப் சுற்று தொடங்குகிறது. இறுதிப் போட்டி 29-ந்தேதி நடக்கிறது.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் டெல்லி-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 8 மணி), உ.பி.-பெங்கால் (இரவு 9 மணி) மோதுகின்றன.