கோபிசெட்டிபாளையம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட காப்பகத்தில் இருந்து 11 சிறுவர்கள் மீட்பு
- பொலவகாளி பாளையம் பகுதியில் அனுமதியின்றி குழந்தைகள் இல்லம் நடத்தப்பட்டு வருவது தெரிய வந்தது.
- காப்பகத்தில் இருந்த 11 சிறுவர்கள் மீட்கப்பட்டு ஈரோட்டில் உள்ள அரசு ஆண்கள் குழந்தைகள் இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.
கோபி:
ஈரோடு மற்றும் கோபி செட்டிபாளையம் பகுதிகளில் அனுமதியின்றி குழந்தைகள் காப்பகம் நடத்தப்படுவதாக ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து கோபி செட்டிபாளையம் அருகே உள்ள பொலவகாளிபாளையம் பகுதியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்து சோதனை செய்தனர்.
அப்போது பொலவகாளி பாளையம் பகுதியில் அனுமதியின்றி குழந்தைகள் இல்லம் நடத்தப்பட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து தொடர்ந்து அந்த குழந்தைகள் காப்பகத்தில் அதிகாரிகள் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் கோபி செட்டிபாளையம் போலீசில் குழந்தைகள் பாதுகாப்பு பராமரிப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அந்த குழந்தைகள் காப்பகம் கடந்த 4 மாதமாக அனுமதியின்றி செயல்பட்டதும். அங்கு 18 வயதுக்குட்ட 11 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த காப்பகத்தில் இருந்த 11 சிறுவர்கள் மீட்கப்பட்டு ஈரோட்டில் உள்ள அரசு ஆண்கள் குழந்தைகள் இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இதை தொடர்ந்து அந்த காப்பகத்தின் நிர்வாகி குருமூர்த்தி என்பவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.