மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்லும் காட்சி.
பஞ்சப்பள்ளி அணையில் இருந்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
- பஞ்சப்பள்ளி சின்னாறு அணைக்கு நீர்வரத்து நள்ளிரவு திடீரென அதிகரித்துள்ளது. வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருந்தது.
- 3-வது நாளாக சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளியில் சின்னாறு அணை உள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால் சின்னாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக கடந்த 17-ந்தேதி அன்று அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் அப்படியே சின்னாற்றில் திறந்து விடப்பட்டது.
இதையடுத்து தளி, அஞ்செட்டி பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் அங்குள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பியது. இதில் சில ஏரிகள் நீர்வரத்து அதிகரிப்பால் உடைந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் பஞ்சப்பள்ளி சின்னாறு அணைக்கு நீர்வரத்து நள்ளிரவு திடீரென அதிகரித்துள்ளது. வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருந்தது.
இதனால் அணையின் மதகுகள் சட்டரை தாண்டி முழு கொள்ளளை எட்டியதை கவனித்த அணையின் ஊழியர்கள் உடனே வெள்ளஅபாய எச்சரிக்கை ஒலியை அடித்தனர்.
பின்னர் அணையின் பாதுகாப்பு கருதி இன்று ஆற்றில் உபரிநீர் 28 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டுள்ளது. இதனால் 3-வது நாளாக சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தால் பஞ்சப்பள்ளி-மாரண்டஅள்ளி சாலை துண்டிக்கப்பட்டது. சாலைக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பாலக்கோடு-தேன்கனிக்கோட்டை சாலையை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.