தமிழ்நாடு

பெரியார் போற்றுதும்.. நிர்மலா சீதாராமனுக்கு த.வெ.க. தலைவர் விஜய் பதிலடி

Published On 2025-03-12 19:11 IST   |   Update On 2025-03-12 19:11:00 IST
  • பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!?
  • மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே?

நேற்று மாநிலங்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், "திமுக எம்பிக்கள் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்கள் என தர்மேந்திர பிரதான் பேசியதை திரும்பபெறக் சொல்கிறீர்கள். ஆனால், தமிழ் படித்தால் பிச்சைக்கூட கிடைக்காது என்றும் தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் (பெரியார்) படத்திற்கு மாலை போடுகிறீர்கள்" என தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம் தெரிவித்து த.வெ.க. தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் அவர்களுக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே?

முரண்களைக் கடந்து எங்கள் கொள்கைத் தலைவரான பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!?

குழந்தைத் திருமணத்தை எதிர்த்ததால், விதவை மறுமணத்தை ஆதரித்ததால், சாதிக் கொடுமைகளை எதிர்த்ததால் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால், இன்றைய நிலையுடன் பொருத்திப் பார்த்துச் சொன்னால், இன்று எல்லோரும் கேட்கும் சமூக நீதிக்கான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நூறாண்டுகளுக்கு முன்பே கேட்டவர் என இன்னும் அவரைப் போற்றுவதற்கான பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

ஒன்றிய அரசின் மீதான விமர்சனங்களை மறைப்பதற்குக் கூடப் பெரியார் தொடர்பான சர்ச்சையைக் கிளப்பும் அளவுக்கு வலுவானவராக இன்றும் பெரியார் இருக்கிறாரே... இது போதாதா அவரைத் தமிழ்நாடு ஏன் இன்றும் மாலை மரியாதை செய்து போற்றுகிறது என்பதற்கு?! பெரியார் போற்றுதும் பெரியார் சிந்தனை போற்றுதும்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News