தமிழ்நாடு

தமிழை காட்டுமிராண்டி மொழி என பெரியார் கூறியது ஏன்? - நிர்மலா சீதாராமனுக்கு கொளத்தூர் மணி விளக்கம்

Published On 2025-03-12 15:01 IST   |   Update On 2025-03-12 15:01:00 IST
  • தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்திற்கு மாலை போடுகிறீர்கள் என நிர்மலா சீதாராமன் பேச்சு
  • நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

நேற்று முன்தினம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியது அப்போது தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, திமுக எம்.பி.க்களின் கடும் கண்டனத்தை அடுத்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று மாநிலங்களவையில் உரையாற்றிய தர்மேந்திர பிரதான், "யாருடைய மனதும் புண்படும்படி பேசி இருந்தால் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழருக்கும், தமிழகத்திற்கும் எதிரானது அல்ல" என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "தமிழ்நாட்டின் கல்வித்தரம் கொரோனா நோய்த்தொற்றிற்கு பிறகு பின்தங்கியுள்ளது. 3 ஆம் வகுப்பு மாணவர்களால் 1 ஆம் வகுப்பு பாட புத்தகத்தை கூட படிக்க முடியவில்லை.

திமுக எம்பிக்கள் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்கள் என தர்மேந்திர பிரதான் பேசியதை திரும்பபெறக் சொல்கிறீர்கள். ஆனால், தமிழ் படித்தால் பிச்சைக்கூட கிடைக்காது என்றும் தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் (பெரியார்) படத்திற்கு மாலை போடுகிறீர்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார் என்று கொளத்தூர் மணி அவர்கள் பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், "தந்தை தன் மகனையோ, மகளையோ பார்த்து, தறுதலை என்று பேசுவது அவன் தறுதலையாகப் போகவேண்டும் என்ற விருப்பத்தில் அல்ல. உன்னை மாற்றிக் கொள் என்பதற்காக. பெரியார் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதுகூட, தமிழ் அறிவியல் இல்லாத வெறும் மதமும் காதலும் மட்டுமே கொண்ட மொழியாக இருக்கிறது, அறிவியல் இல்லை என்ற கோபத்தால் வந்ததாக புரிந்துகொள்ளவேண்டும். அதனால் தான் பெரியார் கூட சொன்னார்... 'யாராவது அறிவியல் சார்ந்த, மக்கள் முன்னேற்றம் சார்ந்த இலக்கியங்களைப் படைத்து வந்தால் என் செலவில் அச்சிட்டு உங்களுக்கு சன்மானமும் கொடுக்க தயாராக இருக்கின்றேன்' என்று அறிவித்தவர் பெரியார்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News