அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு, எலி காய்ச்சல் பாதித்த 5 பேர் அனுமதி
- அரசு ஆஸ்பத்திரி காய்ச்சல் வார்டில் தங்கியிருந்து 45 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
- சுகாதாரத்துறையினர் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் மழைக்காலத்தையொட்டி வைரஸ் காய்ச்சல் உள்பட பல்வேறு காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது. அதன் தொடர்ச்சியாக காய்ச்சலை தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
ஆனாலும் காய்ச்சல் பாதிப்பு தொடர்வதால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்தோர் அதிக அளவில் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். சேலம் அரசு ஆஸ்பத்திரி காய்ச்சல் வார்டில் தங்கியிருந்து 45 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும் தினசரி 100-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இது தவிர டெங்கு காய்ச்சல் வார்டில் 4 பேரும், எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரும் அரசு ஆஸ்பத்திரி சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் தேவூர் அருகே மாற்று திறனாளி வெங்கடேஷ் (28) என்பவர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து அந்த பகுதியில் சுகாதாரத்துறையினர் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் காய்ச்சல் பாதித்தவர்கள் உடனடியாக அருகில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வேண்டும், காய்ச்சல் பரவாமல் தடுக்க சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.