அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் ஒரு கண்ணோட்டம்
- அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச்செயலாளர் பொறுப்பு உருவாக்கப்படுகிறது.
- கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் அறிவிப்பு மற்றும் தேர்தல் அதிகாரிகளை நியமித்துத் தீர்மானம்.
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. பொதுக்குழுவிற்கு ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததையடுத்து சென்னை அருகே வானகரத்தில் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:
1. அ.தி.மு.க. அமைப்புத் தேர்தலின் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தல்.
2. தந்தை ஈ.வெ.ரா. பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவி அம்மா ஆகியோருக்கு "பாரத் ரத்னா" விருது, விரைந்து வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.
3. கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவெ டுப்பது சம்பந்தமாக.
4. அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் பொறுப்பு உருவாக்கப்படுகிறது.
5. கழக சட்ட திட்ட விதிகளின்படி, கழக இடைக்காலப் பொதுச் செயலாளரை தேர்வு செய்து தீர்மானம்.
6. கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் அறிவிப்பு மற்றும் தேர்தல் அதிகாரிகளை நியமித்துத் தீர்மானம்
7. கழகம் எழுச்சி பெற ஒற்றைத் தலைமை தேவை.
8. புரட்சித் தலைவர் உருவாக்கிய மக்களாட்சியின் மறுபதிப்பாக அம்மா ஆட்சியின் சரித்திரச் சாதனைகளும்; எடப்பாடி கே. பழனிசாமியின் தலைமையில் செயல்பட்ட அம்மா அரசின் வரலாற்று வெற்றிகளும்.
9. அம்மா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு மகத்தான மக்கள் நலத் திட்டங்களை, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ரத்து செய்துள்ள தி.மு.க. அரசுக்குக் கண்டனம்.
10. விலைவாசி உயர்வால் சிக்கித்தவிக்கும் ஏழை, எளிய மக்கள்; கட்டுமானப்பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலையேற்றம் முதலானவற்றை தடுக்க தவறியதோடு, மின்மிகை மாநிலத்தை, மின்வெட்டு மாநிலமாக மாற்றியுள்ள தி.மு.க. அரசுக்குக் கண்டனம்.
11. சட்டம்-ஒழுங்கை பேணிக் காக்கத் தவறி, அமைதிப் பூங்காவாய் இருந்த தமிழ்நாட்டை, அமளிக்காடாக மாற்றியுள்ள தி.மு.க. அரசுக்குக் கடும் கண்டனம்.
12. * மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல்.
* நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க, தி.மு.க. அரசுக்கு வலியுறுத்தல்.
13. இலங்கைத் தமிழர்களின் நலன் காக்கவும், அவர்களின் மறுவாழ்வை மேம்படுத்தவும், மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தல்.
14. பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படும் என்கிற வாக்குறுதி என்னவாயிற்று? அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆகியோருக்கான அகவிலைப்படி உயர்வு-வாக்குறுதிகள் என்னவாயிற்று? பொய் முகம் தான் தி.மு.க. அரசோ?
15. நெசவாளர்களின் துயர்துடைக்கும் விதமாக, நூல் விலையேற்றத்தை தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தல்.
16. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியும், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கழகத்தினர் மீது, பொய் வழக்குகளைப் புனைந்தும் பழிவாங்கி வரும் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்.