தமிழ்நாடு (Tamil Nadu)

அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் கருப்புக்கொடி காட்டுவோம்- அ.தி.மு.க. போஸ்டர் யுத்தம்

Published On 2024-08-26 06:05 GMT   |   Update On 2024-08-26 06:05 GMT
  • அ.தி.மு.க. மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
  • அண்ணாமலைக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மானாமதுரை:

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே வார்த்தை போர் பல மாதங்களாக தொடர்ந்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தலைவர்களின் கருத்து மோதல் அதனை பொய்யாக்கியது.

அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் குறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திதோடு மோதல் போக்கையும் அதிகரிக்க செய்தது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் அண்ணாமலைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை அளித்து வருகிறார்கள்.

இதற்கிடையே 2026-ம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாது என்றும், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வந்தது தொடர்பாகவும் சர்ச்சைக் குரிய கருத்துகளை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் மீண்டும் தெரிவித்து இருந்தார். இதற்கு அ.தி.மு.க. மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்தநிலையில் அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன சுவரொட்டிகள் திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒட் டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் அண்ணாமலையே எச்சரிக்கிறோம். அ.தி.மு.க. பற்றியோ, கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் பற்றியோ, கழக அம்மா பேரவைச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் பற்றியோ தவறாக பேசினால், அண்ணாமலையே நீ செல்லும் இடமெல்லாம் கருப்புக்கொடி காட்டுவோம் என்று எச்சரிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. இளைஞரணி சார்பில் அண்ணாமலைக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News