பொள்ளாச்சியில் சிப்காட் அமையப்போவதாக வதந்தியை பரப்பி விவசாயிகளை குழப்ப முயற்சிக்கிறார்கள்- அமைச்சர்
- சில அரசியல் இயக்கங்கள் குளிர்காய நினைத்தார்கள்.
- முதலமைச்சர் எப்போதும் விவசாயிகளின் தோழனாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கினார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். கூட்டத்தில் சப்-கலெக்டர் கேத்தரின் சரண்யா, நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பொள்ளாச்சி அருகே மெட்டுவாவி பகுதியில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதாக வதந்தியை பரப்பி, பொதுமக்கள் மத்தியில் ஒரு குழப்பமான சூழ்நிலையை உருவாக்க கூடிய வகையில் சில அரசியல் இயக்கங்கள் செயல்பட்டு வந்தன. இதுவரை சிப்காட் அமைப்பதற்கு எந்தவிதமான புதிய அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.
அரசின் சார்பில் சட்டமன்றத்திலோ, நிதிநிலை அறிக்கையிலோ அல்லது மானிய கோரிக்கையிலோ எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் இருக்க கூடிய என்.இ.பி.சி. நிலங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் மெட்டுவாவியில் என்.இ.பி.சி. நிலங்கள் இருப்பதாக அறியப்பட்டு, அந்த கணக்கெடுப்பு பணிகள் தான் நடைபெற்று வருகிறது.
சிப்காட் அமைப்பதற்கு எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதை மாற்றி ஏதோ இந்த பகுதியில் சிப்காட் அமைப்பதாக விவசாயிகள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி, பதற்றத்தை உருவாக்கி அதன் மூலம் சில அரசியல் இயக்கங்கள் குளிர்காய நினைத்தார்கள். எனவே தமிழக முதலமைச்சர் சார்பில் விவசாயிகளை சந்தித்து, இதற்கான தெளிவான ஒரு விளக்கத்தை வழங்கி இருக்கிறோம். விவசாயிகளும் அரசுக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். முதலமைச்சர் எப்போதும் விவசாயிகளின் தோழனாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
குறிப்பாக அரசின் மீது குறை சொல்வதற்கு இதுபோன்ற தவறான கருத்துக்களை விவசாயிகள் மத்தியில் கூறி வருகின்றனர். இது முற்றிலும் தவறானது. விவசாயிகள் பயப்பட வேண்டியதில்லை. நிச்சயம் முதலமைச்சர் துணை உங்களுடன் நிற்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.