தமிழ்நாடு

பள்ளி மாணவியிடம் அத்துமீறல்: உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்

Published On 2024-12-22 02:50 GMT   |   Update On 2024-12-22 02:50 GMT
  • உதவி ஜெயிலர் பாலகுருசாமி, அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு அந்த மாணவியை தனியாக அழைத்துள்ளார்.
  • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தின.

மதுரை:

மதுரை மத்திய சிறையில் கைதியாக இருந்து விடுதலையான ஒருவர், மதுரை பைபாஸ் சாலை பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். அந்த ஓட்டலுக்கு சில தினங்களுக்கு முன்பு, மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பணியாற்றி வரும் பாலகுருசாமி என்பவர் சென்றார். அப்போது, அங்கிருந்த கைதியின் பேத்தியான 14 வயது மாணவியிடம் பேசி, அவரது செல்போன் எண்ணை வாங்கியுள்ளார்.

இதற்கிடையே, உதவி ஜெயிலர் பாலகுருசாமி, அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு அந்த மாணவியை தனியாக அழைத்துள்ளார். இதைத்தொடர்ந்து தனது சித்தியுடன் சம்பவ இடத்திற்கு அந்த மாணவி சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த பாலகுருசாமி தன்னுடன் வாகனத்தில் வருமாறு மாணவியை அழைத்தாராம்.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் சித்தி, தன் அக்காள் மகளிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட முயற்சி செய்ததாக கூறி உதவி ஜெயிலர் பாலகுருசாமியை நடுரோட்டில் வைத்து எட்டி உதைத்தார். பின்னர் செருப்பாலும் தர்மஅடி கொடுத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தின.

இதனைத் தொடர்ந்து, பாலியல் தொல்லை அளித்த புகாரில், மத்திய சிறை உதவி ஜெயிலர் பாலகுருசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பொது இடத்தில் அரசு அதிகாரியை தாக்கியது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News