முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் 1303 ஆதி திராவிட தொழில் முனைவோருக்கு ரூ.160 கோடி மானியம்
- அறிவுத் திறன் வகுப்பறைகள் போன்ற நவீன வசதிகளுடன் மேம்படுத்த ரூ.13 கோடி முதலமைச்சரால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகளை உருவாக்கும் திட்டத்தின்கீழ் 2,787 வீடுகள் கட்டுவதற்கு ரூ.126.47 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஆதி திராவிட பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. குறிப்பாக 1303 ஆதிதிராவிட தொழில் முனைவோர்க்கு ரூ.160 கோடி மானியம், ரூ.1000 கோடியில் அயோத்தி தாசர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம், ரூ.200 கோடியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம், ரூ.410 கோடியில் ஆதிதிராவிடர்-பழங்குடியினர் தொழில் முனைவு திட்டம், ஆதிதிராவிட மகளிர் நிலம் வாங்கிட ரூ.30 கோடியில் நன்னிலம் திட்டம், 199 சமத்துவக் கிராமங்களுக்கு ரூ.30 கோடி பரிசு, ரூ.19 கோடியில் 2861 ஆதிதிராவிடர்க்கு இலவச வீட்டு மனைகள், ரூ.100 கோடியில் மாணவ, மாணவியர் விடுதிகளுக்குக் கட்டிடங்கள், ரூ.158 கோடியில் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் ரூ.117 கோடியில் 120 அறிவுசார் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளை மறுசீரமைத்திட முதற் கட்டமாக திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளை நவீன முன்மாதிரிப் பள்ளிகளாகவும், சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளைத் தேவையின் அடிப்படையில் வாகன வசதி, அறிவுத் திறன் வகுப்பறைகள் போன்ற நவீன வசதிகளுடன் மேம்படுத்த ரூ.13 கோடி முதலமைச்சரால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயத் தொழிலாளர்களாக உள்ள ஆதி திராவிட மகளிரை நில உடமையாளர்களாக மாற்றி சமூக நிலை மற்றும் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் நன்னிலம் எனும் ஆதி திராவிடர் மகளிருக்கான நிலம் வாங்கும் திட்டத்தைப் புதிதாக முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில், 217 பயனாளிகளுக்கு ரூ.10.63 கோடி மானியம் வழங்கப்பட்ட நிலையில், அதிக மகளிரை நில உடமையாளராக மாற்றுவதற்காக 2024-2025-ம் நிதியாண்டில் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளார்.
பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகளை உருவாக்கும் திட்டத்தின்கீழ் 2,787 வீடுகள் கட்டுவதற்கு ரூ.126.47 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 500 நரிக்குறவர் மற்றும் 1,000 இதர பழங்குடியினர் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 20 மாவட்டங்களில் ரூ.79 கோடி செலவில் 1,500 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.