தமிழ்நாடு

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

Published On 2024-03-21 07:34 GMT   |   Update On 2024-03-21 07:57 GMT
  • சைதாப்பேட்டையில் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இடம் உள்ளது.
  • சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை:

சென்னையில் இன்று 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனம் மற்றும் ஐ.டி. நிறுவனம் ஆகியவற்றுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.

சென்னை தரமணியில் உள்ள ஐ.டி. வளாகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு இன்று காலை 7.10 மணிக்கு அதிகாரிகள் காரில் வந்தனர். அவர்கள் அந்த அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர் பாலா என்பவருக்கு சென்னை நீலாங்கரையில் உள்ளது. அங்கும் சோதனை நடைபெற்று வருகிறது. நீலாங்கரையில் மட்டும் 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

மேலும் சைதாப்பேட்டையில் இந்த கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஊழியர் வைர கணேஷ் என்பவரின் வீடு புது வண்ணாரப்பேட்டையில் உள்ளது. அங்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இப்போது சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபல கட்டுமான நிறுவனம் தமிழகம் முழுவதும் முக்கியமான பகுதிகளில் இடத்தை வாங்கி குடியிருப்பு மனைகளாக மாற்றி விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News