குமரி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு: கால்வாய், குளங்கள் உடைப்பு- மூழ்கிய நெற்பயிர்கள்
- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து 11 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- நாகர்கோவில் நகர பகுதியிலும் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் இன்னும் வடியவில்லை.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. மயிலாடியில் நேற்று அதிகபட்சமாக 303.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் மலையோர பகுதிகளிலும் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து 11 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் காரணமாக கோதையாறு, குழித்துறை, தாமிரபரணி ஆறு, வள்ளியாறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பல்வேறு இடங்களில் உள்ள விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது. சுசீந்திரம் பகுதியில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
புத்தேரி பகுதியிலும் பழையாற்றில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. மாவட்டத்தின் மேலும் சில இடங்களிலும் சானல்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
பூதப்பாண்டி அருகே சண்முக புரம் குளம் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இரவிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட காடாங்குளத்திலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில் நகர பகுதியிலும் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் இன்னும் வடியவில்லை. ஊட்டுவாழ்மடம், சக்தி கார்டன், மீனாட்சி கார்டன், ரெயில்வே குடியிருப்பு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளதால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
தோவாளை அண்ணா காலனி, திருப்பதிசாரம் நெசவாளர் காலனி, சகாய நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அகஸ்தீஸ்வரம், காமராஜ புரம் தென்தாமரை குளம் பகுதியிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. ஈசாந்திமங்கலம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதால் செவிலியர்கள், டாக்டர்கள், பொதுமக்கள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பதிசாரம் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
பேச்சிப்பாறை அணைக்கு தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வருவதால் மேலும் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. எனவே கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.57 அடியாக உள்ளது. அணைக்கு 6208 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 5032 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 75.32 அடியாக உள்ளது. அணைக்கு 5642 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 587 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 16.89 அடியாக உள்ளது. அணைக்கு 732 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 534 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.
மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகளும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. பொய்கை அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது.