தாராபுரத்தில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை
- சிறுத்தை நடமாட்டத்தால் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
- கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், கூண்டு வைத்து பிடிக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் ஓலக்கடை எதிரே தனியாருக்கு சொந்தமான கியாஸ் பங்க் உள்ளது. இது அடர்ந்த காட்டுப்பகுதியாகும். அங்கு தாராபுரத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் வந்துள்ளார்.
அப்போது காட்டுப்பகுதியில் சிறுத்தை ஒன்று வேகமாக பாய்ந்து சென்றுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவக்குமார் உடனே தாராபுரம் போலீசாருக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு காங்கயம் வனச்சரக அலுவலர் மவுனிகா தலைமையில் வனவர் ஷேக்உமர், வனக்காவலர் குணசேகரன், வனக்காப்பாளர் பூரணி ஆகியோர் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிறுத்தை வந்ததற்கான தடயங்கள் ஏதாவது உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தனர்.
மேலும் இந்தப் பகுதியின் அருகே ரங்கம்பாளையம், கருவேலம்பள்ளம், ஆச்சியூர், மங்களம் பாளையம் பிரிவு, கோனேரிப்பட்டி, துலுக்கனூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் அதிக அளவில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. சிறுத்தை நடமாட்டத்தால் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள்-பொது மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
ஏற்கனவே ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கிய சிறுத்தை இதுவரை பிடிபடாத நிலையில் அங்குள்ள சிறுத்தை தான் இங்கு வந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே தாராபுரத்தில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், கூண்டு வைத்து பிடிக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.