திருவண்ணாமலை அருகே அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதி 7 பேர் பலி
- பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
- படுகாயம் அடைந்தவர்களை செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
திருவண்ணாமலை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கௌமங்கலம் பகுதியில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் வடமாநில தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று ஆயுத பூஜை என்பதால் நிறுவனத்தில் பூஜைகளை முடித்தனர். தொடர்ந்து அசாம் மாநிலத்தை சேர்ந்த 9 பேர் உட்பட 11 பேர் ஆயுத பூஜை விடுமுறையை கழிக்க புதுச்சேரிக்கு காரில் இன்ப சுற்றுலா சென்றனர்.
காரை தேன்கனிக்கோட்டை கெளமங்களம் பகுதியை சேர்ந்த புனித்குமார் (வயது23) என்பவர் ஓட்டினார். சுற்றுலா முடிந்து நேற்று இரவு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இரவு சுமார் 9.15 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம், மேல் செங்கம் பகுதியில் உள்ள கிருஷ்ணா நகர் கூட்டு சாலையில் கிருஷ்ணகிரி நோக்கி சென்றனர். அந்தநேரத்தில் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக கார் மீது பஸ் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் நொறுங்கியது. இதனை கண்டு பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த கோர விபத்தில் காரில் கார் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
மேல் செங்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த 4 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கோர விபத்தில் பலியானவர்கள் விவரம் வருமாறு:-
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சாராய், நாராயணன்,
ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் காமராஜ், புனித்குமார் ஆகியோர் பரிதாபமாக பலியானார்கள்.
விபத்தில் படுகாயம் அடைந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த சுப்பான், கிருஷ்ணப்பா, மிசோஸ்மிர்மி, எஸ்டிராபண்குரோ ஆகிய 4 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து மேல் செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த 7 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான அரசு பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.
இந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொக்லைன் எந்திரம் மூலம் கார்-பஸ்சை அப்புறப்படுத்தினர்.
கடந்த 15-ந்தேதி இதே பகுதியில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு பெங்களூருக்கு திருப்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியானார்கள்.
அந்த விபத்து நடந்த ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.
செங்கம் பகுதியில் திருவண்ணாமலை, பெங்களூரு சாலையில் விபத்து எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். சாலை நடுவில் தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தற்போது பனிமூட்டம் அதிகம் காணப்படுவதால் பெங்களூரு செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.