பார்வையாளர்களை அதிகம் கவரும் அரிய வகை நீல நிற ஓணான்கள்
- பாம்பு பண்ணையில் பார்வைக்காக விடப்பட்டு உள்ள அரியவகை ஓணானை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் ரசித்து செல்கிறார்கள்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஓணான் 20 முட்டைகள் போட்டு இருந்தது. அதில் 13 முட்டைகள் குஞ்சு பொரித்தன.
கிண்டியில் உள்ள பாம்பு பண்ணையில் பல்வேறு வகை பாம்புகள், முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் பாம்பு பண்ணையில் பராமரிக்கப்பட்டு வரும் அரியவகை நீல நிற ஓணான் சமீபத்தில் 20 முட்டைகள்போட்டு இருந்தது. இதில் 13 குட்டிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிறந்தன. இவற்றில் 11 ஓணான்கள் அரியவகை நீல நிறத்திலும் மற்றவை பச்சை நிறத்திலும் உள்ளது.
இந்த வகை ஓணான் தென் அமெரிக்காவில் உள்ள கிராண்ட் கேமன் தீவுகளை பூர்வீகமாகக் கொண்டவை ஆகும். அழிந்து வரும் இனமாக அவை உள்ளன.
பாம்பு பண்ணையில் பார்வைக்காக விடப்பட்டு உள்ள அரியவகை ஓணானை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் ரசித்து செல்கிறார்கள். இதுகுறித்து பாம்பு பண்ணை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இந்த வகை ஓணான்கள் தென் அமெரிக்காவில் உள்ள கிராண்ட் கேமன் தீவுகளை பூர்வீகமாகக் கொண்டது. இது அழிந்து வரும் இனமாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ஒரு ஜோடி நீலநிற ஓணானை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கைப்பற்றி இங்கு பராமரிப்பில் விட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஓணான் 20 முட்டைகள் போட்டு இருந்தது. அதில் 13 முட்டைகள் குஞ்சு பொரித்தன. இதில் 11 நீல நிறத்தில் உள்ளது.
ஓணான் வகைகளில் நீல நிறம் மிகவும் அரிதானது. பச்சை, பழுப்பு நிறத்தில் உள்ளவை மிகவும் பொதுவானவை. இதில் நீல நிற ஓணான்கள் தனித்தன்மை வாய்ந்தவை. அவை இனப்பெருக்க காலத்தில் மட்டுமே துணையை தேடும்.
அவற்றின் தோலில் மஞ்சள் நிறமி கிடையாது. சாம்பல், கருப்பு மற்றும் பழுப்பு நிறமிகளை மட்டுமே உருவாக்கி நிறம் மாற முடியும்.
இவை பொதுவாக 20 முதல் 30 அங்குலம் அளவு வரை வளரும். சுமார் 30 பவுண்டுகள் எடை இருக்கும். சிறிய நீலநிற ஓணான்கள் 10 முதல் 14 அங்குலம் அளவில் இருக்கும்.
நீல நிற ஓணான் சிறந்த செல்லப்பிராணிகளாகவும் உள்ளன. வெளிச்சந்தையில் இதற்கு அதிக மவுசு உள்ளது. இந்திய மதிப்பில் ரூ.78 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
இவற்றை பராமரிக்க அதிக கவனம்தேவை. நமது பராமரிப்பில் அவைகள் 60 ஆண்டுகள் வரை வாழ முடியும். காடுகளில் அவற்றின் ஆயுட்காலம் சுமார் 25 முதல் 40 ஆண்டுகள் ஆகும். அவை மரத்தின் குழிகளிலும், பாறை இடுக்குகளிலும் தூங்குவதற்கு அதிகம் விரும்பும். கிண்டி பாம்பு பண்ணையில் இப்போது மொத்தம் 56 அரிய வகை ஓணான்கள் உள்ளது.
ஏற்கனவே வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் ஒரு ஜோடி பச்சை நிற ஓணான்களை பூங்கா நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்து உள்ளனர். அவை இதுவரை 2 முறை இனப்பெருக்கம் செய்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.