கச்சத்தீவு விவகாரத்தில் மோடியின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது- செல்வப்பெருந்தகை
- கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை கவர்னர் ஆர்.என். ரவி விளக்குவாரா ?
- பா.ஜ.க.வின் இரட்டை வேடம் மட்டுமல்ல, பிரதமர் மோடியின் இரட்டை வேடமும் அம்பலமாகியுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமேஸ்வரம் சென்ற கவர்னர் ஆர்.என். ரவி, மீனவர்களை சந்தித்து நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.
இதே ராமநாதபுரத்தில் கடல் தாமரை மாநாடு நடத்திய போது, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும், மீனவர்கள் கைதும், படகுகள் பறிமுதலும் இருக்காது என்று அன்றைய எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் 2014 தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி கொடுத்தார்.
அதை நிறைவேற்றுவதற்கு கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை கவர்னர் ஆர்.என். ரவி விளக்குவாரா ?
சமீபத்தில் இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்க தலைநகர் புதுடெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த போது இலங்கை அரசுக்கு 4 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியதையும், இலங்கை அரசின் கடனை சீரமைக்க இந்தியா மேலும் ஆதரவளிக்கும் என்றும் பிரதமர் மோடி உறுதி கூறினார்.
இலங்கைக்கு நிதியுதவி செய்கிற பிரதமர் மோடி, கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தாரா? ஏன் வைக்கவில்லை?
2024 தேர்தல் பிரச்சாரத்தில் கச்சத்தீவை பற்றி பிரதமர் மோடி பேசியதற்கு பிறகு இதுவரை அதனை மீட்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்? இதன்மூலம் பா.ஜ.க.வின் இரட்டை வேடம் மட்டுமல்ல, பிரதமர் மோடியின் இரட்டை வேடமும் அம்பலமாகியுள்ளது.
எனவே, தமிழக மீனவர் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்று தமிழக கவர்னருக்கோ, மத்திய பா.ஜ.க. அரசுக்கோ அக்கறை இருக்குமேயானால் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதுகுறித்து நடவடிக்கை எடுக்க கையாலாகவில்லை எனில் கச்சத்தீவை பற்றி கவர்னர் ஆர்.என். ரவியும், பா.ஜ.க.வினரும் பொதுவெளியில் பிதற்றாமல் இருப்பது நல்லது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.