ராமேசுவரம் துறைமுகத்தில் விசைப்படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள காட்சி.
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல 3-ந்தேதி வரை தடை
- தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 1,000 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளன.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை காரணமாக ராமேசுவரம், பாம்பன் பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் நேற்றும், இன்றும் மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுரையின்பேரில் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 1,000 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளன.
இதனால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்றும், இன்றும் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த புயல் எச்சரிக்கை காரணமாக ஒரு நாளைக்கு ரூ.1 கோடி முதல் ரூ.1.50 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் வருகிற 3-ந் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.