சாக்கடை கால்வாயில் கிடந்த ஐம்பொன் கிருஷ்ணர் சிலை- ஆசிரமத்தில் இருந்து திருடியது கண்டுபிடிப்பு
- சீல் வைக்கப்பட்ட ஆசிரமத்தில் இருந்து சிலைகள் மற்றும் பொருட்கள் திருட்டு போய் உள்ளதாக ஆசிரம நிர்வாகி புகார் தெரிவித்து இருந்தார்.
- கல்லூரி சாலையில் சாக்கடையில் இருந்து மீட்கப்பட்ட சிலை காப்பகத்திலிருந்து திருடப்பட்ட கிருஷ்ணர் சிலை என்பது உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சாக்கடை கால்வாயில் சிலை ஒன்று கிடப்பதை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் உதவியுடன் சாக்கடையில் இருந்த சிலையை வெளியே எடுத்து தூய்மைப்படுத்தினர். அப்போது அது சுமார் 3 அடி உயரம் உள்ள ஐம்பொன் கிருஷ்ணர் சிலை என்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அதனை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமுருகன்பூண்டியில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் பலியானார்கள். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் அந்த ஆசிரமத்திற்கு சீல் வைத்தனர்.
இதற்கிடையே சீல் வைக்கப்பட்ட ஆசிரமத்தில் இருந்து சிலைகள் மற்றும் பொருட்கள் திருட்டு போய் உள்ளதாக ஆசிரம நிர்வாகி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் கல்லூரி சாலையில் சாக்கடையில் இருந்து மீட்கப்பட்ட சிலை காப்பகத்திலிருந்து திருடப்பட்ட கிருஷ்ணர் சிலை என்பது உறுதி செய்யப்பட்டது. அதனை யாரோ திருடி வந்த நிலையில் காவல்துறையினருக்கு பயந்து இதனை சாக்கடையில் வீசி சென்றனரா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.