பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்ப உள்ள பிரச்சனைகள்.. பட்டியலிட்ட டி.ஆர்.பாலு
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் அத்துமீறல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.
- புதிய சட்டங்களின் பெயர்கள் இந்தியில் சமஸ்கிருதத்தில் இருப்பதை கண்டித்து பேசுவோம்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2025-26 நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பான ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுப்ப உள்ள பிரச்னைகள் குறித்து பேசினார்.
டி.ஆர்.பாலு கூறியதாவது:
* யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி பிப்.6-ந்தேதி டெல்லியில் போராட்டம் நடைபெறும்.
* வக்பு சட்ட திருத்த மசோதா குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கை குறித்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும். இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து நாங்கள் நாடாளுமன்றத்திற்கு குரல் கொடுப்போம்.
* ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சட்டத்தை மீறி செயல்பட்டு வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் அத்துமீறல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.
* நிதி வருவாயில் மாநில அரசின் பங்கை முறைப்படி கொடுக்க வேண்டும் என்றும் ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரியுள்ளோம்
* இந்தியா முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்.
* இயற்கை பேரிடர் நிதியை வழங்குமாறு பிரதமருக்கு, முதல்வர் ஏற்கனவே பலமுறை கடிதம் மூலம் வலியுறுத்தினார். ஆனால் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. ஆகவே இதுகுறித்து நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி பேசுவோம்.
* தேர்தலின்போது பதிவு செய்யப்படும் வீடியோக்களை இனிமேல் வெளியிட மாட்டோம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததற்கு எதிராக குரல் கொடுப்போம்.
* புதிய சட்டங்களின் பெயர்கள் இந்தியில் சமஸ்கிருதத்தில் இருப்பதை கண்டித்து பேசுவோம்.
* தமிழக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் அத்துமீறலை தடுக்க பிரதமர் தலைமையிலான குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்
என்று தெரிவித்தார்.