முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் தமிழகத்தில் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
- காலை உணவு திட்டம் மூலம் சுமார் 1.48 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
- வரும் நாட்களில் இந்த திட்டத்தால் பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையும், பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள சில மாநகராட்சிகள், நகராட்சிகள், கிராம ஊராட்சிகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,543 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் குறிக்கோள் மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்வது, ஊட்டச்சத்து குறைபாடினால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது, ஊட்டச்சத்து நிலையை உயர்த்துவது, பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வருகையை உயர்த்தி தக்க வைப்பதுதான் ஆகும். தற்போது இந்த காலை உணவு திட்டமானது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் காரணமாக மாணவர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 2 மாதங்களில் தமிழகத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட பள்ளிகளில் 1,319 பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் வருகையானது அதிகரித்துள்ளது மாநில திட்டக்குழு எடுத்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்ட திட்டக்குழு பகுப்பாய்வின்படி தமிழகத்தில் 217 பள்ளிகளில் வருகை முறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சரின் இந்த திட்டத்தால் அனைத்து மாவட்டங்களிலுமே மாணவர்கள் வருகை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதன் மூலம் அங்குள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை முழு சதவீதமான 100 விழுக்காடை எட்டியுள்ளது இந்த திட்டத்திற்கு கிடைத்த பெருமையாக கருதப்படுகிறது.
இந்த மாவட்டங்கள் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் காலை உணவு திட்டம் வெகு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் 98.5 சதவீதமும், கரூர் 97.4 சதவீதமும், நீலகிரி 96.8 சதவீதமாகவும் காணப்படுகிறது.
இதுதவிர இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ள பள்ளிகளில் 1,086 பள்ளிகளில், மாணவர்கள் வருகை என்பது 20 சதவீதம் அதிகரித்துள்ளது. 22 பள்ளிகளில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக மாணவர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
இதுகுறித்து மாநில திட்டக்குழு அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டமானது 1,543 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு பிறகு பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை எவ்வாறு உள்ளது என்பதை அறிய நாங்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டோம்.
எங்கள் ஆய்வானது திட்டம் செயல்பாட்டில் உள்ள 1,543 பள்ளிகளில் உள்ள வருகை பதிவேடுகள் மற்றும் புவியியல் ஒருங்கிணைப்புகளை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. 25 மற்றும் அதற்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை, தொடர்ந்து 75 சதவீதத்திற்கு மேல் வருகை தருபவர்கள் ஆய்வில் எடுத்து கொள்ளப்பட்டனர். இதில் 72 பள்ளிகளில் வருகை என்பது நேர்மறையான போக்கினை காட்டியது.
இந்த திட்டத்தில் முதல் கட்டமாக 1.14 லட்சம் மாணவர் பயன்பெற்றனர். 2-வது கட்டத்தில் 56 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். மொத்தத்தில் இந்த திட்டம் மூலம் சுமார் 1.48 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். ஒரு சாப்பாட்டுக்கு 12 ரூபாய் 71 காசு செலவாகும்.
இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு, இந்தத் திட்டமானது மேலும் பல மையங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால் வரும் நாட்களில் இந்த திட்டத்தால் பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையும், பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தற்போது நாங்கள் முதல் கட்ட ஆய்வினை மட்டுமே செய்துள்ளோம். தொடர்ந்து அடுத்தடுத்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.