தமிழ்நாடு

சின்னசேலம் தனியார் பள்ளி வன்முறையில் ஆசிரியர்களின் பட்டச்சான்றிதழ்களும் எரிப்பு

Published On 2022-07-22 09:23 IST   |   Update On 2022-07-22 09:23:00 IST
  • பணியில் சேரும்போது ஆசிரியர்கள் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் வாங்கி, அவர்கள் வசம் வைத்திருந்தது.
  • கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக சரிவர ஊதியம் கிடைக்காமல் தவித்தோம்.

சின்னசேலம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 17-ம் தேதி ஏற்பட்ட வன்முறையில் பள்ளிக்கு தீ வைக்கப்பட்டது. பள்ளிக்கட்டிடம் பற்றி எரிந்தது. இதில் மாணவர்களின் சான்றிதழ்கள், பள்ளியின் முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவை சாம்பலாயின.

இந்த கலவரத்தில் முக்கியமாக பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் பட்டச்சான்றிதழ்களும் எரிந்து சாம்பலாகி உள்ளது.

இதுதொடர்பாக இங்கு பணியாற்றும் ஆசிரியை ஒருவர் கூறும்போது, "பணியில் சேரும்போது எங்களது சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் வாங்கி, அவர்கள் வசம் வைத்திருந்தது. நடந்த கலவரத்தில், எங்களது சான்றிதழ்களும் தீயில் கருகிவிட்டது. பள்ளி மூடப்பட்டுள்ள சூழலில் வேறு பள்ளியில் வேலை தேடலாம் என்றாலும், சான்றிதழ் இல்லாததால் தவித்து வருகிறோம்.

கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக சரிவர ஊதியம் கிடைக்காமல் தவித்தோம். தற்போதுதான் நிலைமை சற்று சரியானது. தற்போதுள்ள சூழலில் பள்ளி மீண்டும் இயங்குமா? என்பதுதெரியவில்லை. இந்த இக்கட்டான நிலையில், சான்றிதழ் இல்லாத எங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது.

இப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு அவரவர் சான்றிதழ்களின் நகல்கள் அடிப்படையில் புதிய சான்றிதழ்களை உடனே வழங்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

Tags:    

Similar News