குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல்: பிரதமர் மோடியுடன் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
- கடந்த மாதம் ஏற்கனவே இருமுறை தமிழகம் வந்த பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மீண்டும் தமிழகம் வருகிறார்.
- நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க குலசேகரன்பட்டினத்தில் 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பை தமிழக அரசு ஒதுக்கி தந்துள்ளது.
தூத்துக்குடி:
பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.
தேர்தல் கூட்டணி, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3-வது முறையாக 2024-ம் ஆண்டு தேர்தலில் வென்று ஆட்சி அமைக்க வேண்டும் என பா.ஜ.க. தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதற்காக பா.ஜ.க. தலைவர்கள் மட்டுமின்றி பிரதமர் மோடியும் கடந்த சில மாதங்களாகவே நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் அந்தந்த மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ஏற்கனவே அங்கு முடிக்கப்பட்டுள்ள வளர்ச்சி திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தும் வருகிறார்.
அந்த வகையில் பிரதமர் மோடி இன்று குஜராத், உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
கடந்த மாதம் ஏற்கனவே இருமுறை தமிழகம் வந்த பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மீண்டும் தமிழகம் வருகிறார். வருகிற 27-ந் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து 28-ந் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.
இதற்காக 28-ந் தேதி காலை மதுரையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார். பின்னர் துறைமுக வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அப்போது அவர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரிக்கும் ராக்கெட், செயற்கைகோள்கள் வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2 ராக்கெட் ஏவுதளங்களில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து சிறுகுறு மற்றும் நானோ வகையில் எடை குறைந்த செயற்கைகோள்களை விண்ணில் ஏவுவதற்காக எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை இஸ்ரோ தயாரித்து வருகிறது. இந்த வகை ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்காக மத்திய அரசு புதிதாக ஏவுதளத்தை அமைக்க முடிவு செய்தது.
அதன்படி பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் சிறந்த இடமாக தேர்வு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க குலசேகரன்பட்டினத்தில் 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பை தமிழக அரசு ஒதுக்கி தந்துள்ளது. இந்நிலையில் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் மோடி தூத்துக்குடியில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
மேலும் தூத்துக்குடி துறைமுக விரிவாக்கப்பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து ரூ.550 கோடி மதிப்பீட்டில் ரமேஸ்வரன் பாம்பன் கடலின் குறுக்கே புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே தூக்குப்பாலத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.
பிரதமர் மோடி கலந்து கொள்ளும் தூத்துக்குடி அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார். இதனைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் வருகையையொட்டி கடலோர காவல் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கூடுதலாக தென்மண்டல ஐ.ஜி., நெல்லை சரக டி.ஐ.ஜி. தலைமையில் தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. தூத்துக்குடி அரசு விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி அதனை முடித்துக்கொண்டு நெல்லையில் நடைபெறும் பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
இதற்காக அவர் தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வருகிறார். பின்னர் பொதுக்கூட்டம் முடிந்தவுடன் ஹெலிகாப்டர் மூலம் கேரளா செல்கிறார்.