தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாகிவிட்டது- ஜி.கே.வாசன் ஆவேசம்
- காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு மதிக்கவில்லை.
- கல்வி, விவசாயம் துறைகள் மோசமடைந்துள்ளன.
திருச்சி:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது.
திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் குணா வரவேற்று பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ், வடக்கு மாவட்ட தலைவர் கே.வி.ஜி.ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தலைமை தாங்கி பேசியதாவது,
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு மதிக்கவில்லை. இதை கண்டு கொள்ளாமல் திமுக அரசு மவுனம் காக்கிறது. தமிழகத்தில் உண்மையான ஜனநாயகம் மலரவில்லை. கல்வி, விவசாயம் துறைகள் மோசமடைந்துள்ளன. விவசாயிகள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
காவிரி நதிநீர் என்பது விவசாயிகளின் உயிர் பிரச்சனை. இதில் திமுக அரசு நாடகமாடுகிறது. திமுக கூட்டணி கட்சியின் ஆட்சி நடக்கும் கர்நாடகாவுக்கு சென்று தண்ணீர் பெற்றுக் கொடுக்க திமுகவினர் எந்த முயற்சியும் எடுக்க வில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாகி கொலை-கொள்ளை தொடர்ந்து நடக்கிறது. போலீசாரின் கைகள் கட்டப்பட்டு உள்ளது. இது தான் திராவிட மாடல் ஆட்சியா? இப்போது திமுக. அரசை பார்த்து திமுக. ஆண்டது போதும், மக்கள் மாண்டது போதும் என்று நாங்கள் கூறுகிறோம்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக பாஜக கட்சி தலைவர் அண்ணாமலை பேசும்போது, தமிழகத்தில் அரசியல் மாற்றம் நடக்காததால் திமுகவினர் தைரியமாக உள்ளனர். தமிழகத்தில் 4500 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை. 19,260 ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. 10 ஆயிரம் பள்ளிகள் சிதிலம் அடைந்துள்ளன. 45 ஆண்டுகளாக வளர்ச்சியில் இரண்டாம் இடத்தில் இருந்த தமிழகம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 50 ஆண்டுகளில் அமையாத, காமராஜரின் சிறப்பான ஆட்சி 2026-ல் அமையும். என்றார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது: தமிழக வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர் காமராஜர். அவர் கட்டிய பள்ளிகள், அணைகள், தொழிற்சாலைகள் தான் இன்றளவும் உள்ளது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்தது.
கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் மது விலக்கை நீக்கினார். காமராஜர் நூற்றாண்டுவிழாவை காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தப்படியாக பாமக தான் கொண்டாடியது. என்றார்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியது:
மக்கள் விரும்பும் நேர்மையான, ஊழலற்ற, பூரண மதுவிலக்கு ஆட்சியை தர வேண்டும் என்பது எங்கள் கனவு. காமராஜர் நேர்மையாக ஆட்சி நடத்தினார். இப்போதைய ஆட்சியில் ஊழல் தலை விரித்தாடுகிறது. என்றார்.
முடிவில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் இன்டர்நெட் ரவி நன்றி கூறினார்.