உணவு டெலிவரி செய்ய 'கூகுள் மேப்' பார்த்து சென்ற வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி
- 112 என்ற கட்டுப்பட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு உதவி கேட்டார்.
- பவுன்ராஜ் அவரது செல்போனில் இருந்து இருப்பிட லொக்கேஷன் அனுப்பினார்.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது 25). இவர் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுமார் 11.20 மணியளவில் துரைப்பாக்கம் வி.ஜி.பி. அவென்யூவில் உள்ள ஒரு வீட்டுக்கு உணவு டெலிவரி செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
உணவு டெலிவரி செய்யும் இடத்திற்கு செல்ல செல்போனில் "கூகுல் மேப்" பார்த்தபடி சென்றார். இருள் சூழ்ந்திருந்த பகுதியை மேப் காட்டியதால் கண்மூடித்தனமாக சென்ற பவுன்ராஜ் அங்குள்ள சதுப்பு நில சேற்றில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கி கொண்டார்.
சேற்றில் சிக்கிய பவுன்ராஜ் அதிலிருந்து மீள முடியாததால் கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் பரிதவித்த அவர் 112 என்ற கட்டுப்பட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு உதவி கேட்டார். பின்னர் பவுன்ராஜ் செல்போன் எண்ணிற்கு அருகில் உள்ள துரைப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் தொடர்பு கொண்டு எந்த பகுதியில் உள்ளீர்கள் என்று கேட்டனர்.
பவுன்ராஜ் அவரது செல்போனில் இருந்து இருப்பிட லொக்கேஷன் அனுப்பினார். உடனே துரைப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சேற்றில் சிக்கிக் கொண்டிருந்த வாலிபரையும் மோட்டார் சைக்கிளையும் மீட்டனர்.
காப்பாற்ற யாரும் வராத நிலையில் மிகவும் அச்சத்தில் இருந்த நேரத்தில் விரைந்து வந்து மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு கண்ணீர் மல்க பவுன்ராஜ் நன்றியை தெரிவித்தார். பின்னர் வாலிபருக்கு தண்ணீர் கொடுத்து சிறிது நேரம் இளைப்பாற வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.