4-வது நாளாக ஊருக்குள் புகுந்து அட்டகாசம்: 3 வீடுகளை சூறையாடிய புல்லட் ராஜா யானை
- குழுவினர் தற்போது 5 பிரிவுகளாக பிரிந்து காட்டு யானையை கண்காணித்து வருகின்றனர்.
- ஒற்றை காட்டு யானையின் அட்டகாசம் நீடிப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் சேரம்பாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட சேரங்கோடு டேன் டீ, சின்கோனா, நர்சரி, படச்சேரி, சேரங்கோடு பஜார், தட்டாம்பாறை, சேரம்பாடி டேன் டீ உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றை காட்டு யானை (புல்லட் ராஜா) அட்டகாசம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த யானை கடந்த சில நாட்களில் மட்டும் 35-க்கும் மேற்பட்ட வீடுகளை தாக்கி சேதப்படுத்தி உள்ளது. மேலும் விவசாய பயிர்களை சேதப்படுத்துவது, வாகனங்களை தாக்குவது, பொதுமக்களை ஆக்ரோஷமாக துரத்துவது என்று புல்லட் ராஜாவின் தொல்லை நீடித்து வருகிறது.
தொடர்ந்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் ஒற்றை யானையை வனத்துக்குள் விரட்டும் பணிக்காக 75 ஊழியர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, இந்த குழுவினர் தற்போது 5 பிரிவுகளாக பிரிந்து காட்டு யானையை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் டிரோன் கேமரா மூலமாகவும் புல்லட் ராஜா பதுங்கி இருக்கும் இடத்தை கண்டறிந்து, கும்கி யானைகள் உதவியுடன் அடர்ந்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனாலும் வனத்துறையினர் முயற்சிக்கு இதுவரை பலன் கிட்டவில்லை.
இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமககள், வனத்தில் இருந்து வெளியே வரும் புல்லட் ராஜா தொடர்ந்து எங்கள் பகுதியில் அட்டகாசம் செய்து வருகிறது. எனவே அந்த யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தெப்பக்காடு யானை முகாமுக்கு கொண்டு சென்று பராமரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் நாகநாதன் தலைமையில் வனத்துறை உயர்மட்ட குழுவினர் ஆய்வுக்கூட்டம் பந்தலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம், 3 நாட்கள் அவகாசம் கொடுங்கள், நடவடிக்கை எடுக்கிறோம் என கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே வனத்தில் இருந்து வெளியேறிய புல்லட் ராஜா யானை இரவு சேரம்பாடி டேன்டீ சரகம்-1 பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கு வசிக்கும் கூலித்தொழிலாளிகள் சுமதி, சாந்தி, கருப்பாயி ஆகிய 3 பேரின் குடியிருப்புகளை தாக்கி சேதம் செய்தது. மேலும் துப்பிக்கையால் வீட்டில் உள்ள டி.வி., கட்டில் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை வெளியே இழுத்து போட்டு சேதப்படுத்தியது. அந்த நேரத்தில் வீட்டுக்குள் இருந்தவர்கள் பின்பக்கம் வழியாக சென்று அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
சேரங்காடு பகுதியில் ஒற்றை காட்டு யானையின் அட்டகாசம் நீடிப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
சேரம்பாடி வனச்சரகம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் புல்லட் யானையை வனப்பகுதிக்கு விரட்டும் நடவடிக்கைகளில் வனத்துறையினர் 5-வது நாளாக தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.