அதிமுகவில் பிரிவு ஏதும் இல்லை.. இபிஎஸ் தலைமையில் இருப்பதுதான் அதிமுக- முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்
- இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆஜராகி விளக்கம் தர உத்தரவிட்டது.
- தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.வி.சண்முகம் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் ஆஜரானார்.
இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரிய மூர்த்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கில் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது 8 வாரத்தில் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆஜராகி விளக்கம் தர உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.வி.சண்முகம் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இன்று நடைபெற்ற தேர்தல் ஆணையத்தின் விசாரணையில், மனு தாரர்கள், எதிர் மனு தாரர்கள், அவர்களுடைய பதில், ஆட்சேபனைகள் இருந்தால் அனைத்தையும் வரும் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது.
அதற்கு ஏதாவது ஆட்சேபனைகள் இருந்தால் அடுத்த மாதம் 13ம் தேதிக்குள் ஆட்சேபனைகள் தெரிவித்த பிறகு இதுகுறித்து விசாரிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சூரிய மூர்த்தியின் மனுவின் மீது இன்று விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையத்தில், எதிர் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவின் நகல் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு கால அவகாசமும் கோரப்பட்டிருக்கிறது.
அதிமுகவில் பிரிவு எதுவும் கிடையாது, இபிஎஸ் தலைமையில் இருப்பதுதான் அதிமுக.
இவ்வாறு அவர் கூறினார்.