மேட்டூர் அணை நீர்மட்டம் 55.82 அடியாக உயர்வு
- கடந்த மாதம் 10-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
- நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரத்து 514 கனஅடியாக அதிகரிப்பு.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதே போல் தென் மேற்கு பருவ மழை சரிவர பெய்யாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறக்காததாலும் நீர்வரத்தும் குறைந்தது.
இதையடுத்து கடந்த மாதம் 10-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதே போல் இந்த மாதம் தமிழகத்துக்கு திறந்து விட வேண்டிய தண்ணீரும் கர்நாடக அணைகளில் இருந்து இன்று வரை திறந்து விடப்படவில்லை.
இதற்கிடையே கடந்த ஒரு மாதமாக தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருந்தது. மேலும் அணைக்கு வரும் நீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது.
கடந்த 2 நாட்களாக தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 498 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று வினாடிக்கு 10ஆயிரத்து 514 கனஅடியாக அதிகரித்து உள்ளது.
இதே போல் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.82 அடியாக உயர்ந்தது. கடந்த மாதம் 10-ந் தேதி அணையில் தண்ணீர் நிறுத்தப்பட்ட போது 30 அடியாக இருந்த நீர்மட்டம் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 25 அடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் அது 250 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அைடந்து உள்ளனர்.