என்.எல்.சி. ஊழியர்கள் போராட்டம்: ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க உயர் நீதிமன்றம் யோசனை
- இருதரப்பும் கலந்து ஆலோசித்து ஆகஸ்ட் 11ம் தேதி தெரிவிக்கும்படி உத்தரவிட்டார்.
- ஊழியர்கள் போராட்டம் நடத்த வரையறுக்கப்பட்ட இடங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு.
சென்னை:
என்.எல்.சி. தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், பணிக்கு வரும் ஊழியர்களுக்கும், என்.எல்.சி. நிறுவனத்திற்கும் பாதுகாப்பு வழங்கக் கோரியும் என்.எல்.சி. தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, என்எல்சி நிர்வாகத்திற்கும் ஒப்பந்த தொழிலாளர்களுககும் இடையிலான பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியத்தை நியமிக்கலாம் என நீதிபதி யோசனை தெரிவித்தார்.
அப்போது, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அதிகாரிகள் அடங்கிய குழு ஏற்கனவே இருப்பதாக என்.எல்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தீர்வை விரும்புகிறீர்களா? பிரச்சனையை விரும்புகிறீர்களா? என கேள்வி எழுப்பினார். மேலும் இந்த விஷயத்தில் இருதரப்பும் கலந்து ஆலோசித்து ஆகஸ்ட் 11ம் தேதி தெரிவிக்கும்படி உத்தரவிட்டார்.
அதேசமயம், ஊழியர்கள் போராட்டம் நடத்த வரையறுக்கப்பட்ட இடங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய கடலூர் மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவு பிறப்பித்தார். அறிக்கை தாக்கல் செய்ய தவறினால் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தார்.