தமிழ்நாடு

பார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை இல்லை- சென்னை உயர்நீதிமன்றம்

Published On 2024-08-29 12:11 GMT   |   Update On 2024-08-29 12:11 GMT
  • வரும் 31 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும்.
  • சென்னையில் நடத்துவதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது.

வரும் 31 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மின்விளக்குகள் பொருத்துவது, போட்டியை 8,000 பேர் கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், பார்முலா-4 கார் பந்தயத்தை சென்னையில் நடத்துவதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பி.என்.எஸ்.பிரசாத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

நேற்று பிற்பகலில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், பார்முலா4 கார் பந்தயத்தை நடத்துவதற்கு எதிரான வழக்கு ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடைக்கோரிய வழக்கில் முறையீட்டை ஏற்றுக்கொண்டு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்தது.

அதன்படி, பார்முலா 4 கார் பந்தயம் தடைக்கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில், எப்ஐஏ சர்வதேச அமைப்பு சான்று பெறாமல் பந்தயம் நடத்த கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு சான்றில்லாமல் பந்தயம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் எப்ஐஏ சான்று நகலை மனுதாரர்களுக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணையின்போது, பாதுகாப்பு, போக்குவரத்து குறித்து உயர்நீதிமன்ற உத்தரவின்படி அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News