அ.தி.மு.க. தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர்- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
- புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரால் கடந்த 50 ஆண்டுகளாக மனிதநேயமிக்க இயக்கமாக அ.தி.மு.க. விளங்கி வருகிறது.
- கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை யாரால், எப்படி ஏற்பட்டுள்ளது? யாரால் இந்த சதிவலை பின்னப்பட்டது என்பது தொண்டர்களுக்கு தெரியும்.
மதுரை:
தமிழக அரசியலில் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்ற கோஷம் எழுந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களாக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே கடும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில் டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்னை வந்தார். அங்கிருந்து சொந்த ஊர் செல்வதற்காக இன்று மதியம் விமானம் மூலம் மதுரை வந்தார்.
அவருக்கு எம்.பி.க்கள் ரவீந்திரநாத்குமார், தர்மர், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் மற்றும் கனிஷ்கா சிவக்குமார் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
அப்போது மாலைகள், சால்வைகள் அணிவித்தனர். விமான நிலையம் அருகில் நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்த ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் பன்னீர்செல்வம் வாழ்க என்று கோஷம் எழுப்பினர்.
மதுரை விமான நிலையம் வந்த ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரால் கடந்த 50 ஆண்டுகளாக மனிதநேயமிக்க இயக்கமாக அ.தி.மு.க. விளங்கி வருகிறது. தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கும் கட்சியாக இதுவரை செயல்பட்டு வந்துள்ளது.
தற்போது கட்சியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது யாரால், எப்படி ஏற்பட்டுள்ளது? யாரால் இந்த சதிவலை பின்னப்பட்டது என்பது தொண்டர்களுக்கு தெரியும். அவர்கள் தவறு செய்தவர்களுக்கு உரிய பாடம் கற்பிப்பார்கள். அ.தி.மு.க. தொண்டர்கள் உண்மையை அறிவார்கள். அவர்கள் இப்போதும் என் பக்கம் உள்ளனர். நான் தொண்டர்களுக்காகவே தொடர்ந்து கட்சியில் இருந்து பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.