பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது- காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்
- பணம் தராவிட்டால் சமூக வலைதளத்தில் வீடியோவை வெளியிடுவேன் என்று மாணவியை மிரட்டியுள்ளார்.
- மாணவியின் வீடியோ மட்டுமின்றி பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ஆரூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் அருண் பிரசாத் என்கிற சிட்டா (வயது 23). இவர் அதேபகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரிடம் பழகி உள்ளார். அப்போது அந்த மாணவிக்கு தெரியாமல் அவரை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு அந்த மாணவியிடம் வீடியோவை காட்டி மிரட்டி அருண் பிரசாத் பணம் கேட்டுள்ளார். பணம் தராவிட்டால் சமூக வலைதளத்தில் வீடியோவை வெளியிடுவேன் என்று மாணவியை மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது வீட்டிற்கு செல்லாமல் பக்கத்து கிராமத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மாணவி சோகத்துடன் இருப்பதை பார்த்த உறவினர்கள் மாணவியிடம் விசாரித்துள்ளனர். பின்னர் மாணவி நடந்ததை தெரிவித்துள்ளார். மாணவியின் உறவினர்கள் ஆரூர் கிராமத்தில் உள்ள அருண் பிரசாத்தின் வீட்டிற்கு சென்று அவரிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மாணவியன் உறவினர்கள் வாலிபரை தாக்கி அவரிடம் இருந்து செல்போனை பிடுங்கிப் பார்த்துள்ளனர். அதில் மாணவியின் வீடியோ மட்டுமின்றி பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மாணவியின் உறவினர்கள் அந்த செல்போனை சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் தெரிவித்தனர். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தகவல் அறிந்த அருண் பிரசாத் தப்பிவிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அருண் பிரசாத்தை அவரது தொலைபேசி எண்ணின் மூலம் தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில் குளத்தூர் 4 முனை சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பஸ்சில் அருண் பிரசாத் வந்திறங்கினார். உடனே அருண் பிரசாத்தை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், ஒரிரு தினங்களில் போலீஸ் காவலில் எடுத்து அருண் பிரசாத்திடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.