தமிழ்நாடு
மருத்துவம் பயின்று ஏழைகளுக்கு சேவை புரிவதே நோக்கம்- நீட் தேர்வில் வென்ற தோடரின மாணவி பேட்டி

மாணவி நீத்துசின்.

மருத்துவம் பயின்று ஏழைகளுக்கு சேவை புரிவதே நோக்கம்- நீட் தேர்வில் வென்ற தோடரின மாணவி பேட்டி

Published On 2023-06-16 10:25 IST   |   Update On 2023-06-16 10:25:00 IST
  • தோடர் பழங்குடியினத்தில் இருந்து வரப்போகும் முதல் மருத்துவர். இது பெரிய சாதனை.
  • நீத்துசின் நீட் தேர்வில் 145 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

ஊட்டி:

நடப்பாண்டு நீட் நுழைவு தேர்வு கடந்த மே 7-ந் தேதி நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் 691 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

நீட் தேர்வு முடிவுகள் கடந்த 13-ந் தேதி வெளியானது. இதில் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவி நீத்துசின் தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஊட்டி கார்டன் மந்தை சேர்ந்தவர் நார்ஷ்தோர் குட்டன். இவரது மனைவி நித்யா. இந்த தம்பதியரின் மகளான நீத்துசின் நீட் தேர்ச்சி பெற்ற முதல் தோடர் இன மாணவி ஆவார்.

மேலும் மருத்துவம் படிக்க போகும் முதல் மாணவி என்ற பெருமைக்குரியவர் என தோடரின மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நீத்துசின் கூறும்போது, எங்கள் தோடர் இனத்தில் இருந்து மருத்துவம் படிக்கும் முதல் மாணவியான நான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது.

நான் மருத்துவம் பயின்று, வசதியற்ற மக்களுக்கும், எனது சமுதாயத்துக்கும் சேவை புரிவதே எனது நோக்கம் என்றார்.

தமிழ்நாடு காங்கிரஸ் பழங்குடியினர் பிரிவு மாநில தலைவர் பிரியா நாஷ்மிகர் கூறியதாவது:-

தோடர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த நீத்து சின் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

இவர் தோடர் பழங்குடியினத்தில் இருந்து வரப்போகும் முதல் மருத்துவர். இது பெரிய சாதனை. கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இவருக்கு கைகொடுத்தது. இவரின் சாதனை தோடர் பழங்குடியினருக்கு பெருமை சேர்ப்பதாகும்.

இவரது வெற்றிக்குப்பிறகு பழங்குடியின குழந்தைகள் அனைவரும் உத்வேகத்துடன், தடைகளை தகர்த்து பெரிய உயரங்களை எட்டுவார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நீத்துசின் நீட் தேர்வில் 145 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். எஸ்.டி. பிரிவு மாணவர்கள் தேர்ச்சி பெற 109 மதிப்பெண்கள் போதுமானது.

Tags:    

Similar News