தமிழ்நாடு
அமலாக்கத்துறை சோதனை நடத்திய விவகாரம்- டாஸ்மாக் வழக்கு விசாரணை 9-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

அமலாக்கத்துறை சோதனை நடத்திய விவகாரம்- டாஸ்மாக் வழக்கு விசாரணை 9-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

Published On 2025-04-01 12:08 IST   |   Update On 2025-04-01 12:12:00 IST
  • அமலாக்கத் துறை சார்பில் புதிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
  • மனுவில், டாஸ்மாக் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பான தகவல்கள் இடம்பெற்று இருந்தன.

சென்னை:

சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின்னர் மதுபான கொள்முதல் நடவடிக்கைகளில் ரூ.1000 கோடி வரை முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை, அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி அடிப்படை கட்டமைப்புக்கு விரோதமானது. மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்ட விரோதமானதாக அறிவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக உள்துறை செயலாளர், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும். எந்த வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பது குறித்த விவரங்களையும் அமலாக்கத்துறை தெரிவிக்க உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அறிவித்தனர். இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றும் படியும் பரிந்துரைத்தனர்.

அதே நேரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை தொடர்பாக குறிப்பிட்டு கோரிக்கை வைக்காமல், பொத்தாம் பொதுவாக உள்ளதால் அதை திருத்தம் செய்து புதிய மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதன்படி டாஸ்மாக் நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்ட டாஸ்மாக் நிறுவனமும், தமிழக அரசும் இணைந்து திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்து உள்ளன. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது அமலாக்கத்துறை சார்பில் புதிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'தமிழக அரசின் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. ஆரம்ப கட்டத்திலே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடாது. அமலாக்கத்துறையின் சட்டப்பூர்வமான விசாரணையை திசை திருப்பும் வகையில் இந்த வழக்குகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ளது. தமிழக அரசுக்கு அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு ஆணையத்திடம் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.

ஆனால் அங்கு எந்தவிதமான வழக்கும் தொடராமல் நேரடியாக உயர்நீதிமன்றத்தை நாடியது தவறானது. கடந்த காலங்களில் டாஸ்மாக் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ததன் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை இந்த சோதனையை நடத்தியதாகவும் அதன் அடிப்படையிலேயே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழக அரசு குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது" என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த பதில் மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை 8ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், 7 ந்தேதி பதில் மனுக்களை தாக்கல் செய்து ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த வழக்கு 8 மற்றும் 9-ந்தேதிகளில் விசாரிக்கப்படும். அனைத்து தரப்பும் தவறாமல் வாதங்களை முன் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News