தமிழ்நாடு

பட்டியலின மக்களை போலீசார் கோவிலுக்குள் அழைத்து சென்ற காட்சி.

திருவண்ணாமலை அருகே பட்டியலின மக்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி- 500 போலீசார் குவிப்பு

Published On 2023-08-02 11:53 IST   |   Update On 2023-08-02 11:53:00 IST
  • செல்லங்குப்பம் கிராமத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர்.
  • போலீஸ் பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம், செல்லங்குப்பம் கிராமத்தில் 300 குடும்பத்தினர் பொதுப்பிரிவினரும் 200 குடும்பத்தினர் பட்டியல் இனத்தவரும் வாழ்ந்து வருகின்றனர்.

ஊருக்குள் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இதில் பொது பிரிவினர் மட்டும் சாமி கும்பிட்டு வந்தனர். 50 வருடங்களுக்கு மேலாக பட்டியலினத்தவர்களை அனுமதிப்பது இல்லை.

பல ஆண்டுகளாக கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் 17-ந்தேதி அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முகநூல் மூலமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் செல்லங்குப்பம் கிராமத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து தாங்களும் இந்த கோவிலுக்குள் வருவோம் என்று பட்டியலின மக்கள் போராட்டத்தில் இறங்கினர். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை இணைந்து கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி இன்று காலை போலீஸ் பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

மேலும் அந்த கிராமத்தில் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உள்பட 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News