பாராளுமன்ற தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட தமிழக பாரதிய ஜனதா வியூகம்
- அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா உறுதியாக உள்ளது.
- 9 தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை சீரமைத்து வலுப்படுத்தும் பணிகளும் ஓசையின்றி நடந்து வருகின்றன.
சென்னை:
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா உறுதியாக உள்ளது.
இதுதொடர்பாக பா.ஜ.க. மேலிட தலைவர்கள் ஆய்வு செய்துவரும் நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களுக்கு பார்வையாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதன் பின்னணியில் பா.ஜ.க. வியூகம் அமைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் 9 தொகுதிகளில் நிச்சயமாக போட்டியிட வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா உறுதியாக உள்ளது. தென்சென்னை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, ஈரோடு, வேலூர் ஆகிய 9 தொகுதிகளை இதற்காக பாரதிய ஜனதா குறி வைத்துள்ளது.
இந்த 9 தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த 9 தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை சீரமைத்து வலுப்படுத்தும் பணிகளும் ஓசையின்றி நடந்து வருகின்றன.
எனவே இந்த 9 தொகுதிகளையும் அ.தி.மு.க.விடம் இருந்து பாரதிய ஜனதா வலியுறுத்தி வாங்கும் என்று கூறப்படுகிறது.