ஆம்பூர் பச்சகுப்பம் பாலத்தை மூழ்கடித்து செல்லும் பாலாற்று வெள்ளம்- போக்குவரத்து நிறுத்தம்
- ஆந்திராவிலும் பரவலாக மழை பெய்து வருவதால் பாலாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
- ஆம்பூர் பாலாற்றில் வெள்ளம் அதிகரித்து சென்றது.
ஆம்பூர்:
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது.
ஆந்திராவிலும் பரவலாக மழை பெய்து வருவதால் பாலாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டியுள்ள 22 தடுப்பணைகளையும் தாண்டி வெள்ளம் ஆர்ப்பரித்து வருகிறது.
தமிழக எல்லையான புல்லூர் தடுப்பணையை தாண்டி பாலாற்றில் வெள்ளம் அதிகரித்து தமிழகத்திற்குள் கரைபுரண்டு ஓடி வருகிறது. வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளம் அதிகரித்து ஆம்பூருக்கு வந்தது.
ஆம்பூர் பாலாற்றில் இன்று வெள்ளம் அதிகரித்து சென்றது. பச்சகுப்பம் பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் சென்றது. 800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். ஒருசிலர் ஆபத்தை உணராமல் வெள்ளத்தை கடந்து சென்றனர். இதனால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.