தமிழ்நாடு

சமூக அநீதிகளை தி.மு.க. செய்து வருகிறது... அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

Published On 2024-09-17 06:27 GMT   |   Update On 2024-09-17 06:27 GMT
  • பீகாரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
  • கணக்கெடுப்பு நடத்த ஊராட்சி மன்ற தலைவருக்குகூட அதிகாரம் உள்ளது.

திண்டிவனம்:

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

இன்று பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி அவரின் உருவசிலைக்கு டாக்டர் ராமதாஸ் மரியாதை செலுத்தி அவரின் கனவை நனவாக்க உறுதியேற்றுள்ளோம். அவரின் கொள்கையை முழுமையாக ஏற்ற கட்சி பா.ம.க. அவரின் வழியில் வந்த கட்சிகள் கொள்கைகளை பேசிக்கொண்டுள்ளனர்.

பெரியார் சமூகநீதிக்கான இந்திய அளவிலான அடையாள சின்னம். சமூகநீதிக்கான அநீதிகளை ஆளும் தி.மு.க.செய்து வருகிறது. தமிழகத்தில் சாதியை வைத்தே அடக்குமுறைகள் ஏற்பட்டது. இதை தெரிந்து கொள்ள கூட முதலமைச்சருக்கு ஆர்வமில்லை. சாதிவாரி கணக்கெடுப்புக்காக 45 ஆண்டுகளாக பா.ம.க. போராடிவருகிறது.

பீகாரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பு நடத்த ஊராட்சி மன்ற தலைவருக்குகூட அதிகாரம் உள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இது தொடர்பாக கணக்கு கேட்டால் அரசிடம் தரவுகள் இல்லை..

1987-ம் ஆண்டு இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு பின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை பெற்றோம். 114 சமூகம் 6.7 விழுக்காடு, வன்னியர் சமூகம் 14.1 விழுக்காடு ஆகும். இது தொடர்பாக சமீபத்தில் அரசு வெளியிட்டது பொய்கணக்குதான். கருணாநிதி இருந்திருந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து இருப்பார். தியாகிகள் தினமான இன்று நாங்கள் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்கள் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறோம்.

அரசில் உள்ள 53 துறைகளில் ஒரு செயலாளர்கூட வன்னியர் கிடையாது. எதிலும் பிரதிநிதித்துவம் இல்லை. 23 வன்னியர்கள், 21 பட்டியல் இன எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும் இரு சமூகத்திலும் தலா 3 அமைச்சர்கள் உள்ளனர். மற்ற சமூக எம்.எல்.ஏ.க்களில் ஒவ்வொரு சமூகத்திலும் எத்தனை அமைச்சர்கள் உள்ளனர் என்பதை எண்ணி பார்க்கவேண்டும். அடையாள அரசியல் செய்யவேண்டும். இன்று பெரியார் பிறந்தநாளில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டாஸ்மாக்குக்கு அதிக வருவாய் ஈட்டியதற்காக ஜெகத்ரட்சகன் எம்.பி.க்கு கலைஞர் விருது அளிக்கப்பட்டதோ என அவர் கேள்வி எழுப்பினார்.

Tags:    

Similar News