பொத்தூரில் உடல் அடக்கம்.... மாலை 5 மணிக்கு இறுதி ஊர்வலம்
- கட்சி அலுவலகம் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய கூடாது என்பது தான் பிரச்சனை.
- நினைவு மண்டபம் கட்ட பிரச்சனை இல்லை.
சென்னை:
கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி தொடர்ந்த வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் முன் இன்று காலை 9 மணிக்கு வழக்கு விசாரணை தொடங்கியது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இருமுறை வழக்கை ஒத்திவைத்தார். இதன்பின்னர் பிற்பகல் 2.15 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியது.
அப்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் உடலை அடக்கம் செய்ய தேவையான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டத்தில் அடக்கம் செய்து கொள்ளலாம். பெரம்பூர் கட்சி இடத்தில் நினைவிடம் அமைத்துக்கொள்ளலாம். கட்சி அலுவலகம் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய கூடாது என்பது தான் பிரச்சனை, நினைவு மண்டபம் கட்ட பிரச்சனை இல்லை. பெரம்பூரில் அரசு அனுமதியுடன் நினைவிடம் கட்டிக்கொள்ளலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங்கின் உடலை ஆவடி அடுத்த பொத்தூரில் அடக்கம் செய்ய உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர்.
இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. அதனால் தொண்டர்கள், நிர்வாகிகள் பொத்தூர் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.