தமிழ்நாட்டில் ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு இரு மடங்காக உயர்வு
- சென்னையில் நேற்று புதிதாக 632 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த படியாக செங்கல்பட்டில் 239 பேரும், திருவள்ளூரில் 79 பேரும், காஞ்சிபுரத்தில் 59 பேரும், கோவையில் 70 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- நேற்று மயிலாடுதுறையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
சென்னை:
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து உள்ளது.
கடந்த 21-ந்தேதி தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,366 ஆக இருந்தது. நேற்று கொரோனா பாதிப்பு 8,970 ஆக இருந்தது.
இதன் மூலம் ஒரே வாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு ஆகி உள்ளது. மேலும் தினசரி பாதிப்பும் அதிகரித்தபடியே இருந்தது. நேற்று ஒரே நாளில் 1,484 பேர் தொற்றுக்குள்ளாகி இருக்கிறார்கள்.
சுகாதாரத்துறையின் ஆய்வில் வணிக வளாகங்கள், சந்தைகள் அல்லது பிற பொது இடங்களுக்கு சென்ற பிறகு 26 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தது.
மேலும் பணியிடங்களில் 18 சதவீத பேரும், பயணத்தின் போது 16 சதவீத பேரும், கல்வி நிறுவனங்கள், விடுதிகள் அல்லது பயிற்சி மையங்களில் 12 சதவீத பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னையில் நேற்று புதிதாக 632 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த படியாக செங்கல்பட்டில் 239 பேரும், திருவள்ளூரில் 79 பேரும், காஞ்சிபுரத்தில் 59 பேரும், கோவையில் 70 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மயிலாடுதுறையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, "கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறி அல்லது அறிகுறியற்ற பாதிப்பு இருக்கிறது. பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
தற்போது தினமும் செய்யப்படும் பரிசோதனை எண்ணிக்கை 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு நாளில் 3 லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளை செய்யும் திறன் தமிழ்நாட்டில் உள்ளது என்றார்.
கொரோனா பரவல் அதிகரிப்புக்கு பி.ஏ.5 மற்றும் பி.ஏ.2.38 ஆகிய துணை வகை வைரசுகள் பரவுவதும், பொதுமக்கள் முக கவசத்தை அணிவதில்லை. சமூக இடைவெளி உள்ளிட்ட தடுப்பு விதிகளை கடைப்பிடிக்காததும் காரணம்.
எனவே பொது இடங்களில் மக்கள் முக கவசத்தை கட்டாயம் அணிந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடை பிடிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.